வடகிழக்கு பருவமழை எதிரொலி - சரசரவென உயரும் தேனி மாவட்ட அணைகளின் நீர் மட்டம்
மேற்கு தொடர்ச்சி மலையடிவார மாவட்டமான தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை. தென்மேற்கு பருவ மழை முடியும் நிலையிலும் வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தாலும் முல்லை பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாகவே அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலும், இடுக்கி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருகிறது. இடுக்கி அணையில் தொடர்ந்து நீர்வரத்து வருவதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குமுளி, தேக்கடியில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான தேக்கடி உட்பட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து 142 அடியை எட்டவுள்ளது. இதனால் முல்லை பெரியாறு அணை கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டுமென்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர்திறப்பும் அதிகரித்துள்ளதால் தேனி மாவட்டம் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி, ஆண்டிபட்டி இடையே வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி முல்லை பெரியாறு அணை பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 2.6 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. முல்லை பெரியாறு அணை, வைகை அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளுக்கு நீர்வரத்துள்ளது.
இதே போல் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் வராகநதியின் குறுக்கே சோத்துப்பாறை மலைப்பகுதியில் இரு மலைகளுக்கு இடையே உள்ள சோத்துப்பாறை அணையிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல், மற்றும் சோத்துப்பாறை மலையடிவாரங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 5.0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்
வைகை அணை: நீர்மட்டம் - 69.32 (71 அடி), நீர் இருப்பு – 5,656 மில்லியன் கன அடி, நீர் வரத்து – 2,354 கனஅடி, நீர் திறப்பு – 2,354 கனஅடி
முல்லை பெரியாறு அணை: நீர்மட்டம் - 140.50 (142 அடி), நீர் வரத்து – 2,795கனஅடி, நீர் திறப்பு – 2,300 கனஅடி
மஞ்சலார் அணை: நீர்மட்டம் - 55.00 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 100 கன அடி , நீர் திறப்பு– 0
சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 126.41 (126.28 அடி) , நீர் இருப்பு – 100 மில்லியன் கனஅடி, நீர் வரத்து –46 கனஅடி, நீர் திறப்பு –30 கனஅடி
சண்முகா நதி அணை: நீர்மட்டம் - 52.50 (52.55 அடி), நீர் இருப்பு – 79.57 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 9 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்