மதுரையில் கை, கால்கள் செயலிழந்த சிறுமி - போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
’’இந்த நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சுமார் 20 முதல் 25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது’’
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மதுரை கருப்பாயூரணி பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் ஜோதி என்பவர்களின் 11 வயது மகள் ப்ரீத்தி. கடந்த 10 நாட்களாக இடுப்பு வலி, கை ,கால், மூட்டு வலி என நடக்க முடியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
முடக்குவாத பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் ஒரு வாரம் ஆகியும் நோயின் பாதிப்பு குறையாமல் கால்கள், கைகள், கழுத்துக்கு கீழ் பகுதியில் நரம்புகள் அனைத்தும் செயலிழந்தது. இதன் பின்பு ப்ரீத்தியை குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு ப்ரீத்திக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவருக்கு IVIG எனும் விலை உயர்ந்த சிறப்பு உயிர்காக்கும் மருந்து அளிக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் அறிவுரையின்படி சிறுநீரக மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மேற்பார்வையில் 6 முறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனாக உடல்நிலை முன்னேறி 23 நாட்கள் கழித்து தானாக நடக்க ஆரம்பித்தார்.
மிக அதிக நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு அதன் பின் விளைவுகளை தடுப்பதற்காக கழுத்து பகுதியில் துளையிடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சிறுமிக்கு கலப்பு இணைப்பு திசு நோய் எனும் மிக அரிய வகை நோய் கண்டறியப்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நலம், நரம்பியல் துறை, முடநீக்கியல் துறை, சிறுநீரக துறை, மயக்கவியல் துறை, தோல் சிகிச்சை, ரத்த வங்கி, பிசியோதெரபி, சிறப்பு மருத்துவ நிபுணர்கள், உணர்வியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்களின் கூட்டு சிகிச்சையால் ப்ரீத்தி குணமடைந்து தற்போது நடக்க ஆரம்பித்துள்ளார்.
இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார் 20 முதல் 25 லட்சம் வரை செலவாகி இருக்கும் இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. மிக மோசமான சூழலில் ப்ரீத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு கட்ட சிகிச்சைக்கு பின்பு மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் ப்ரீத்தி நலமடைந்தது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
இன்று கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!