கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
Nurses Strike: "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்திற்கு சென்ற செவிலியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்"

"தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கிளம்பமாட்டோம் என கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்."
செவிலியர்கள் போராட்டம்
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துக் கொண்டனர்.
திமுகவின் தேர்தல் 356 வாக்குறுதியின் படி ஆட்சிக்கு வந்தால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. மேலும், எங்களுக்கு சாதகமான சமவேலைக்கு சம ஊதியம் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம்
இந்தநிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
செவிலியர்களுக்கு 7,14,20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும். எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்
கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ. 18000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தரத் செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரவு 7:30 மணிக்கு அவர்களை போலீசார் கைது செய்து பேருந்துகள் மூலமாக அழைத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
தொடர்ந்து செவிலியர்கள் விளம்பக்கம் பேருந்து நிலையத்திலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேறாமல் கலைய மாட்டோம் என கூறி திமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைமேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் இணைப்பு துண்டிப்பு - தொடர்ந்த போராட்டம்
தொடர்ந்து நள்ளிரவிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டத்தில், ஈடுபட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனைய நிர்வாகம் திடீரென மின் இணைப்பை துண்டிப்பு செய்தது. இருந்த போதிலும் தங்களது கைகளில் இருந்த கைபேசியில் மூலம் ஒளிர செய்து தொடர்ந்து கண்டன முழுகங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போலீசார் கைது செய்து பேருந்து மூலம் அழைத்து சென்று ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். செவிலியர்கள் போராட்டம் மற்றும் செவிலியர்கள் கைது சம்பவத்தால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.





















