பழனியில் பலத்த மழை; சண்முகாநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் அணைகள் நிரம்பி சண்முகாநதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பேத்துப்பாறை பகுதியில் உள்ள பெரியாற்றில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வசிக்கிற 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது. இதேபோல் பள்ளங்கி கோம்பை கிராமத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையின் குறுக்கே உள்ள ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மூங்கில் காடு கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் ஆற்றை கடக்க தற்காலிக பாலம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் கீழ்மழை கிராமங்களான பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருதினங்களாக விட்டு விட்டு மழை பெய்தது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வரதமாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 550 கன அடி தண்ணீரும், பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீரும் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிரிகரித்தால் சண்முகநதி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் சண்முக நதி ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சண்முகநதி ஆறு செல்லக்கூடிய மானூர், கோரிக்கடவு, கீரனூர், தாராபுரம் வரையில் சண்முக நதி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு, தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்டு கொள்ளாமல் நிலக்கோட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் வைகை ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் நேரில் சென்று கண்காணித்து ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிப்பவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINDIGUL DISTRICT
Date.14.11.2022
Rainfall data(in mm):
1) Dindigul-3.1
2) Kodaikanal(Rose Garden)-4 3) Palani-0
4) Chatripatti-4
5) Natham-2
6) Nilakottai-2
7) Vedasandur-7.8
8) Tobacco Station-7.8
9) Kamatchipurm-1.5
10) Kodaikannal(Briyant Park)-10.9
Total-43.1
Average-4.31 NEM Rainfall (2021)=602.67 NEM Rainfall (2022)=440.34