அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக 20 லட்சம் முதல் ஒரு கோடி ருபாய் வரையில் மோசடி செய்த நபர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் சுகுமார், சரவணன், செந்தில் முருகன், பிரகதா உள்பட 12 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று ஒரு புகார்மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் ஆர்.எம். காலனி 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சோனா சுருளிவேல் (46). இவர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு இவருடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகளில் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்று சோனா சுருளிவேல் கூறினார். அதனை உண்மை என நம்பிய தாங்கள் எங்களின் மகன், மகள்களுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினோம். மேலும் அதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். 12 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடி வரை பெற்றுக்கொண்ட அவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.
இதையடுத்து அவரை சந்தித்து நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அப்போது எங்களுக்கு தனித்தனியாக காசோலைகளை வழங்கினார். ஆனால் அவற்றை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதையடுத்து அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்ற போது தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் பணத்தை திரும்ப கொடுக்காமல் கொலை மிரட்டலும் விடுக்கிறார்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த புகார் மனுவை பெற்ற காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சோனா சுருளிவேல் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திண்டுக்கல் அசோக் நகரை சேர்ந்த கண்ணன் (53) என்பவர் அறிமுகம் ஆனார். கண்ணன் நகை பட்டறை தொழிலாளி ஆவர். இந்த நிலையில் கண்ணன் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கண்ணதாசனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதை உண்மை என நம்பிய கண்ணதாசன் அவருக்கும், அவருடைய தம்பி, தம்பி மனைவி, மைத்துனர் மகன் ஆகிய 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். அதை பயன்படுத்தி கொண்ட கண்ணன் 4 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கண்ணதாசனிடம் இருந்து ரூ.20 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசியபடி வேலை வாங்கி கொடுக்காததால் கண்ணதாசன், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார்.
இதைத்தொடர்ந்து பணத்தை திரும்ப தரும்படி கண்ணனிடம், அவர் கேட்டார். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதோடு, திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணதாசன், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கண்ணன் தனது குடும்பத்துடன் தஞ்சையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தஞ்சைக்கு சென்று அவரை கைது செய்தனர்.
https://www.dailythanthi.com/News/State/fraud-767788
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்