ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் திண்டுக்கல் To சபரிமலைக்கு ரயில் சேவை.. மகிழ்ச்சியில் 3 மாவட்ட மக்கள்
திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 3 மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லிலிருந்து சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது, தேனி, திண்டுக்கல், கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. தற்போது, அதை உண்மையாக்கும் வகையில், முதற்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வரும் நிலையில், மாதந்தோறும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகிறார்கள். ரயில்வேக்கு பெரும் வருமானத்தைத் தரக்கூடிய இந்த திட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.. இதன் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சீசன் காலங்களில் தேனி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வது தொடர்கிறது. திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டால் பக்தர்கள் நலனுக்கும், இருமாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இருமாநில மக்களுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக திண்டுக்கல், தேனி, இடுக்கி(கேரளா) ஆகிய மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
திண்டுக்கல் முதல் பம்பை வரை, அல்லது லோயர் கேம்ப் வரை அகல ரயில் பாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இதுபற்றி ஒருமுறை பதில் அளித்த ரயில்வே அதிகாரிகள், சபரிமலை வரையிலான பாதை அமைப்பதற்காக மத்திய வனத்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இதனால் சாத்தியக்கூறு குறைவாக உள்ளது என்றும் தற்போது திண்டுக்கல்-பம்பை பாதைக்கான ஆய்வு நிறைவடைந்துள்ளது என்றும் வரும் ஆண்டில் திட்ட அனுமதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தனர்.
இந்தநிலையில் தான் திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திண்டுக்கல்-சபரிமலை இடையே சுமார் 201 கி.மீ. தூரம் ரயில்பாதை அமைப்பதற்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குமுளியில் இருந்து சபரிமலைக்கு 106 கி.மீ. தூரம் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கும் ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தேனி எம்.பி. தங்கதமிழ்செல்வன் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்று தேனி மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையின் பொருட்டு நாடாளுமன்ற மக்களவையில் இடைவிடாது முன்வைத்த எனது வேண்டுகோளின் காரணமாக திண்டுக்கல்-சபரிமலை இடையே அமைக்கப்படவுள்ள புதிய ரயில் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை தேனி மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.





















