ஆடி மாதம்.. அய்யலூர் சந்தையில் சரசரவென அதிகரித்த ஆடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு. ஆடிமாத கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடுகளை வாங்கி செல்லும் மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் கிராம பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாக்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் ஆடி மாதத்தில் வாகனங்களுக்கு பூஜை செய்து, காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து உறவினர்களுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம். இதனால் ஆடு மற்றும் கோழிகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக நடந்தது.
நேற்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் போட்டி, போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்.
Viral Video : நட்சத்திரம் போல் ஜொலிக்கும் சந்திரயான் 3.. வீடியோவை வெளியிட்ட சிபில்லா நிறுவனம்..
சந்தையில் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.6 ஆயிரத்து 500-க்கும், வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், கட்டுச் சேவல்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, சந்தையில் செம்மறி ஆடுகளைவிட வெள்ளாடுகள் அதிகளவில் விற்பனையானது. திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் இனிவரும் வாரங்களில் சந்தையில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்