கொசவப்பட்டி அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு திருவிழா - சீறிய காளைகளை சீற்றத்துடன் அடக்கிய காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 41 பேர் காயம்
திண்டுக்கல் அருகே கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு கொசவப்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, பாலமேடு, அலங்காநல்லூர், நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
அந்த காளைகளை, கால்நடை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், திண்டுக்கல் கால்நடை துறை உதவி இயக்குனர் ஆறுமுகராஜ் தலைமையிலான கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். இதில் 4 காளைகள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 20 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். முதலில் ஊர் நிர்வாகம் சார்பில் 10 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் பல்ேவறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு களம் இறங்கின. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முயன்றனர்.
சில காளைகள் களத்தில் நின்று மாடுபிடி வீரர்களுடன் மல்லுக்கட்டின. திமிறிய அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க திணறினர். சிலர் துணிந்து அவற்றை அடக்க முயன்றனர். மேலும் சில காளைகள் சினம் கொண்டு மாடுபிடி வீரர்களை நாலாப்புறம் முட்டி சிதற விட்டு துவம்சம் செய்தன. இருப்பினும் மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.
இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 594 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. களத்தில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி சைக்கிள், பீரோ, கட்டில், குக்கர், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இதற்கிடையே காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 41 பேர் காயமடைந்தனர். இதில் திருச்சியை சேர்ந்த ரூபன் (25), வேலாம்பட்டியை சேர்ந்த கவுதமன் (19), கொசவபட்டியை சேர்ந்த பிலமன்ராஜ் (39), மதுரையை சேர்ந்த சசிகுமார் (26), அ.வெள்ளோட்டை சேர்ந்த கெவின் (20) ஆகிய 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்