திண்டுக்கல் : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்
பாலியல் குற்ற வழக்கில் பெற்ற ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால், திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் தனியார் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் சரண் அடைந்தார்.
![திண்டுக்கல் : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண் Dindigul Governor Jyoti Murugan has surrendered in court in a case of sexual harassment of college students திண்டுக்கல் : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: தாளாளர் ஜோதிமுருகன் நீதிமன்றத்தில் சரண்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/09/5d04f6086449ffb83618737b3ad92a1d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல்லை அடுத்த முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. அங்கு பயின்ற மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் தாளாளர் ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகன், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். அதில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நிபந்தனை ஜாமீன் பெற்ற ஜோதிமுருகன் வடமதுரை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை.
அதோடு உடல்நிலை சரியில்லாததால் கையெழுத்திட இயலவில்லை என்றும், வேறு இடத்தில் கையெழுத்திட அனுமதி கேட்டும் ஜோதிமுருகன் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் போலிசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பினர் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி முரளிசங்கர், ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, 3 நாட்களில் கோர்ட்டில் சரண் அடையும்படி கடந்த மாதம் உத்தரவிட்டார்.அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பை உறுதி செய்து, கோர்ட்டில் சரண் அடையும்படி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நேற்று சரண் அடைந்தார். அவரை வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)