Crime : பட்டப்பகலில் வீடு புகுந்து பூண்டு வியாபாரி வெட்டி படுகொலை - திண்டுக்கல்லில் பரபரப்பு
பட்டப்பகலில் வீடு புகுந்து பூண்டு வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள வேடப்பட்டி ஞானநந்தகிரி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (35). இவர், சரக்கு வாகனத்தில் ஊர், ஊராக சென்று பூண்டு வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி தெய்வானை (33). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. சின்னத்தம்பி நேற்று மதியம் வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர், தனது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் ஒன்று வந்தது.
திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் சின்னத்தம்பியை சரமாரியாக வெட்டினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத சின்னத்தம்பி, உயிர் பிழைக்க வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தது. இதில் நிலைகுலைந்து போன சின்னத்தம்பி வீட்டுக்குள்ளேயே துடி, துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் உதயகுமார், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி, தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சின்னத்தம்பியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்தம்பியின் சகோதரர் பரமசிவம் என்பவர், அருண் குணசேவியரை வெட்டி படுகொலை செய்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக சின்னத்தம்பியை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து பூண்டு வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்