SBI Experience : "ஒருமாத காலம் அலையவைத்த SBI - 13நாட்களில் தீர்வு தந்த RBI" - ஒரு வாடிக்கையாளரின் அனுபவம்!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியின் சேவை என்ற தொல்லை எரிச்சலைத் தந்தாலும், ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை சற்று ஆறுதலைத் தருகிறது. இந்த அனுபவம் புதுமையாக இருந்தது.
நமது வாசகர்களில் ஒருவரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான சு. ஆ. பொன்னுசாமி, வங்கியில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்திருந்தார். அந்த அனுபவ பகிரலை அப்படியே அனைவரின் கண் முன் கொண்டு வருகிறோம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு ஒவ்வொரு அனுபவங்கள் இருக்கும், அதிலும் நேர்மறையான (Positive) அனுபவங்களை விட எதிர்மறையான (Negative) அனுபவங்கள் ஏராளமாக இருக்கும். இந்த எதிர்மறையான அனுபவங்களால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஏராளம் உண்டு. அப்படி எனக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி ATMல் பணம் எடுக்க பரிவர்த்தனை செய்து, பணம் வராமலேயே நான் எடுத்ததாக கூறி என்னை அலைகழித்த வங்கி நிர்வாகத்தோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதன் பிறகு ரிசர்வ் வங்கியை நாடி தீர்வு பெற்றதையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனது அனுபவம் தங்கள் ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நடந்தது என்ன?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சென்னை, மகாகவி பாரதி நகர் கிளையோடு இணைந்திருக்கும் ATM மையத்தில் கடந்த 10.01.2023அன்று காலை 6.07மணியளவில் 5ஆயிரம் ரூபாய் எடுக்க பரிவர்த்தனை செய்த போது பரிவர்த்தனை சரியாக முடிந்ததும் அந்த இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராமல், பணம் எடுத்தது போல் ரசீது மட்டும் வந்தது. உடனே அதே மையத்தில் அருகில் இருந்த ATM இயந்திரத்தில் மற்றொரு பரிவர்த்தனை செய்து 5ஆயிரம் ரூபாய் எடுத்து விட்டு சிறு அறிக்கை (Mini Statement) பிரிண்ட் எடுத்து பார்த்த போது இரண்டு முறை நான் 5ஆயிரம் ரூபாய் எடுத்ததாக வந்தது. அவ்வாறு பரிவர்த்தனை ஆகாத தொகை நமது கணக்கிற்கு திரும்ப வந்து விடும் என்பதால் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் இணையவழியாக பரிவர்த்தனை அறிக்கையை பதிவிறக்கம் செய்து பார்த்த போது அதிலும் இரண்டு முறை பணம் எடுத்ததாகவே பதிவாகி இருந்தது.
பேசி, பேசி பார்த்தும் பலனில்லை:
நானும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது 48மணி நேரத்திற்குள் தங்களின் கணக்கில் பணம் வரவில்லை என்றால் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்குமாறு கூறினர். 48மணி நேரம் கழித்தும் எனது வங்கி கணக்கில் பணம் வரவு ஆகாததால் கடந்த 13.01.2023 அன்று காலையில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்த போது புகாரை ஏற்று பதிவு செய்து கொண்ட வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி (புகார் எண் :- 177560976) அடுத்த 5நாட்களுக்குள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். ஆனால் 6 நாட்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை.
நேரடியாக வங்கி சென்றும் தீர்வில்லை:
அதனால் கடந்த 24.01.2023அன்று வங்கி கிளைக்கு நேரில் சென்று துணை மேலாளரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தேன். அவரும் புகாரைப் பெற்றுக் கொண்டு தன் பங்கிற்கு ஒருவாரம் கழித்து வருமாறு கூறினார். மேலும் இணையவழியாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் அளித்திருந்த புகார் மீது எனது ATM பரிவர்த்தனை சரியாக இருப்பதாக கூறி 28.01.2023 அன்று முடித்து வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி (SMS) வந்ததால் அதிர்ந்து போய் 31.01.2023 அன்று வங்கி கிளைக்கு மீண்டும் நேரில் சென்று துணை மேலாளரிடம் மீண்டும் எழுத்துபூர்வமாக புகார் அளித்த போது புகாரை பெற்றுக் கொண்டவர் ஒரு வாரம் கழித்து வருமாறு கூறினார். அவர் கூறியவாறு மீண்டும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி வங்கி கிளைக்கு நேரில் சென்று கேட்ட போது மூன்று நாட்கள் கழித்து வருமாறு கூற விரக்தி தான் மிச்சமானது.
விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல் இருந்தது!!!
மறுபடியும் துணை மேலாளர் கூறியபடி விக்ரமாதித்தன் வேதாளத்தை துரத்திய கதையாக 10.02.2023 அன்று மீண்டும் SBI வங்கி கிளைக்கு நேரில் சென்று துணை மேலாளரை சந்தித்து புகாரின் நிலை என்ன என கேட்டதற்கு எனது ATM பரிவர்த்தனை வங்கி தரப்பில் சரியாக இருப்பதாக கூறி புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் அனைத்தும் சரியாக இருப்பதாகவும் கூறி கை விரித்து விட ஒருமாதமாக தொடர்ந்து என்னை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, மகாகவி பாரதி நகர் கிளை அதிகாரிகள் அலைகழித்து வந்ததும், ATM ல் எடுக்காத பணத்தை எடுத்ததாக கூறி புகார் முடித்து வைக்கப்பட்டதாக கூறியதும் கடும் அதிர்ச்சியளித்ததோடு, எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அளித்தது.
வேறுவழியின்றி ரிசர்வ் வங்கியை நாடினேன்
அதனால் கடந்த 10.01.2023அன்று மகாகவி பாரதி நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் அமைந்துள்ள ATM ல் நான் பணம் எடுக்க பரிவர்த்தனை செய்த போது பணம் வராத விவகாரத்தில் தீர்வு கேட்டு ரிசர்வ் வங்கியின் புகார் பிரிவு இணையத்தில் (Ombudsman Scheme) கடந்த 10.02.2023அன்று அதற்கான ஆதாரங்களுடன் புகார் அளித்தேன் (Complaint No. N202223006019254).
இன்ப "அதிர்ச்சி" தந்த ரிசர்வ் வங்கி:
நான் அளித்திருந்த புகாரை ஏற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி அது தொடர்பாக 13நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தி எனக்கு வரவேண்டிய தொகை 5ஆயிரம் ரூபாய் மற்றும் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 3900.00ம் ரூபாய் வழங்கிட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மகாகவி பாரதி நகர் கிளைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி 5ஆயிரம் ரூபாயும், பிப்ரவரி 28ம் தேதி 3900.00ம் ரூபாயும் எனது கணக்கில் வங்கி கிளை நிர்வாகம் வரவு வைத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சபாஷ் ரிசர்வ் வங்கி:
ஒருவேளை SBI வங்கி கிளை நிர்வாகத்தின் செயல்பாடுகளால் போய் தொலையட்டும் என விட்டு, விட்டு நான் கடந்து சென்றிருந்தால் எனக்கு தீர்வு கிடைத்திருக்காது போயிருக்கும். ரிசர்வ் வங்கிக்கு இணைய வழி புகார் அளித்ததால் தீர்வு கிடைத்தது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் உண்மை இருக்குமானால் அதற்கான ஆதாரங்களோடு ரிசர்வ் வங்கி புகார் பிரிவு இணையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் ரிசர்வ் வங்கிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏபிபி நாடு கருத்து:
பிரபல தொழிற்சங்கவாதியான சு. ஆ. பொன்னுசாமி போல் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வங்கிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் சோர்ந்துவிட வேண்டாம். ரிசர்வ் வங்கி, கன்ஸ்யூமர் கோர்ட் என பல தீர்விடங்கள் இருக்கின்றன. உரிய ஆதாரங்களுடன் நமது பிரச்சினையை எடுத்துச் செல்லும்போது, தீர்வு கிடைப்பது உறுதி என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உரிய நிவாரணத்தையும், பிரச்சினைக்குத் தீர்வினையும் பெற்றிடுங்கள் என ஏபிபி நாடு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.