PM Modi Flash Light On : "எல்லாரும் மொபைல் டார்ச் லைட்டை ஆன் பண்ணுங்க” : சொன்ன பிரதமர் மோடி.. காரணம் என்ன?
மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது
வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இணைந்தார். அப்போது பாஜக ஆதரவாளர்களிடம் உரையாற்றிய அவர்,தேர்தலுக்காக கட்சித் தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், வடகிழக்கு மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மொபைல் போன்களில் டார்ச் லைட்டை ஒளிரவிடுமாறு கேட்டுக்கொண்டார். “வடகிழக்கு மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில், உங்கள் தொலைபேசிகளில் டார்ச் லைட்டை ஒளிரச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடி சொன்னதை கூட்டம் செய்ததும், “இந்த வகையில் நீங்கள் வடகிழக்கு மக்களை மரியாதை செய்துள்ளீர்கள் இது அவர்களின் தேச பக்தியை கௌரவிப்பதாகும், மேலும் இது வளர்ச்சிப் பாதையை கௌரவிப்பதும் கூட. இந்த விளக்கு வடகிழக்கு மக்களின் மரியாதை மற்றும் அவர்களின் பெருமை. உங்கள் அனைவருக்கும் நன்றி," என்று மேலும் அவர் கூறினார்.
மூன்று மாநில மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில், "திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மக்களுக்கு பணிவுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆசீர்வதித்துள்ளனர். தவிர, இந்த மூன்று மாநிலங்களின் பாஜக ஊழியர்களுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வடகிழக்கில் வேலை செய்வது எளிதானது அல்ல, எனவே அவர்களுக்கு சிறப்பானதொரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
முன்னதாக, மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.
அதன் தொடக்கமாக, நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திரிபுராவுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
மும்முனை போட்டி:
கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம் திரிபுரா. 25 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட்கள் ஆட்சி நடத்தி வந்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில்தான் அவர்களை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இந்த முறையும் களத்தில் இறங்கியது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் களம் கண்ட பாஜக பல சவால்களை எதிர்கொண்டது. பிரதான எதிர்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடிவுகளிலும் எதிரொலித்துள்ளது. பாஜக கூட்டணி 30 தொகுதிகளிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 16 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. இதை அடுத்து மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.