Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டி20 போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஏபிடி, 360 டிகிரி கிரிக்கெட் வீரர் என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் சூர்யகுமார் யாதவ். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது.
சொதப்பும் சூர்யகுமார் யாதவ்:
அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்று கட்டாக்கில் நடந்து வரும் முதல் டி20 போட்டியில் வெறும் 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் கடைசி 10 டி20 போட்டிகளில் எடுத்த ரன்கள் விவரத்தை கீழே காணலாம்.
2 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக
0 ரன் - இங்கிலாந்திற்கு எதிராக
14 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக
12 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக
0 ரன் - இங்கிலாந்திற்கு எதிராக
7 ரன்கள் - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக
0 ரன் - பாகிஸ்தானிற்கு எதிராக
5 ரன்கள் - வங்கதேசத்திற்கு எதிராக
47 ரன்கள் - பாகிஸ்தானிற்கு எதிராக
39 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
1 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
24 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
20 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
3 டக் அவுட்கள்:
கடைசியாக அவர் பேட் செய்த 13 டி20 போட்டிகளின் ரன் விவரம் இது. இந்த போட்டிகளில் அவர் 3 முறை டக் அவுட்டானார். கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அவரது பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராக 47 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த பேட்டிங் ஆகும்.
இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உலா வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். ஹர்திக் பாண்ட்யாவே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 என எந்த வடிவிலும் கேப்டன்சி வழங்கப்படவில்லை.
கேள்விக்குறியாகும் சூர்யா எதிர்காலம்?
உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துவது 35 வயதான அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிறது.
சூர்யகுமார் யாதவ் 96 டி20 போட்டிகளில் ஆடி 90 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் 2766 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார். 4 சதங்கள், 21 அரைசதங்கள் விளாசியுள்ளார். 6 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதில் 3 முறை நடப்பாண்டில் மட்டுமே ஆகியுள்ளார். 155 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.




















