ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கர் அரசு நிலம் - RDO-வின் டிஜிட்டல் கையப்பம் பயன்படுத்தப்பட்டது அம்பலம்
தேனி மாவட்டத்தில் 150 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா போட்ட விவகாரத்தில் RDO கையெப்பத்தை போலியாக பயன்படுத்தியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றனர். இதில் தொடர்புடைய 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையர்கள், தலைமை நில அளவை உதவி ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 7 பேர் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடவீரநாயக்கன்பட்டியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலம் மீட்கப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது.
இதேபோல், தாமரைக்குளம் பகுதியில் இதே அதிகாரிகள் துணையுடன் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை 42 பேர் அபகரித்து பட்டா பெற்றது தெரியவந்தது. அந்த பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த வகையில் பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மொத்தம் 150.65 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், RDO அலுவலகத்தில் ‘A' பதிவேட்டை இணைய வழியில் திருத்தம் செய்து நில ஆவணங்கள் மாற்றப்பட்டதும், அதில் RDOவின் கையொப்பம் டிஜிட்டல் முறையில் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதனால் இந்த நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பணியாற்றிய RDO அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அந்த புகார் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் சிலர் மீதும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நில அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் பெரியகுளம் RDOவாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி ஆகிய இருவரும் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், அவர்கள் பெரியகுளம் RDOவாக பணியாற்றியபோது அவர்களின் டிஜிட்டல் கையொப்பத்தை யாரோ தவறாக பயன்படுத்தியும், இணையதளத்தில் RDOவுக்கான கடவுச்சொல்லை பயன்படுத்தியும் ஆவணங்களில் திருத்தம் செய்து மோசடி செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த புகார்கள் குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் மேலும் சில அலுவலர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்