கொரோனா வார்டில் சேவை செய்யும் தூத்துக்குடி மாணவர்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மாணவர்கள் தன்னார்வலர்களாக சேவை செய்து வருகின்றனர். அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவிட அந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களது சேவை மனப்பான்மையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர், அவர்கள் கொரோனா வார்டில் உதவிகள் செய்திட அனுமதி அளித்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனை டீன் மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பதை கூறினார். மேலும், எவ்வாறு விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் கொரோனா வார்டில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கும், கொரோனா தடுப்பு பணியிலும் 31 மாணவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் விவரங்களை கணினியில் பதிவு செய்வது, கொரோனா பரிசோதனை செய்ய வருபவர்களின் விவரங்களை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தல், பரிசோதனை முடிவுகளை பதிவேற்றம் செய்தல், மருத்துவமனையில் உள்ள கொரோனா உதவி மையத்தில் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொரோனா நோயாளிகளின் நிலவரங்களை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளை இந்த மாணவர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : ‛நான் உன்னை விரும்பல... அழகா இருக்கேன்னு நெனைக்கல...’ ஆனாலும் 51வது வயதில் மாதவன்!
இதுமட்டுமின்றி, கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்குதல், நோயாளிகளின் நிலையை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, கொரோனா படுக்கை விவரங்களை சேகரிப்பது, அதை அட்மிஷன் பிரிவுக்கு தெரிவிப்பது போன்ற தகவல்கள் தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு கவச உடை அணிந்து பணியாற்றும் இந்த கல்லூரி மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்ட் எனவும், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்ட் எனவும் பணியாற்றி வருகின்றனர். முறையான கொரோனா பரிசோதனை செய்தபிறகே இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்கள், வீடுகளுக்கு சென்ற பிறகு தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்தம் 38 மாணவர்கள் இந்த தன்னார்வ தொண்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களாக இந்த சேவையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். உயிர் பயத்தில் பலரும் ஒதுங்கி வரும் இப்பணியை துணிந்து, சேவை மனப்பான்மையுடன் செய்து வரும் இந்த மாணவர்களின் சேவை பாராட்டுக்கு உரியதே!