தொடர் விடுமுறை... பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்.. கொடைக்கானலில் குவியும் மக்கள்
கிறிஸ்துமஸ் விடுமுறை , அரையாண்டு பள்ளி விடுமுறையை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள். இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இக்கோவிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்
தற்போது அரையாண்டு தேர்வு பள்ளி விடுமுறையை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். படிப்பாதை, யானை பாதைகளில் செல்போன் கொண்டு செல்லாதவாறு ஆண்கள், பெண்கள் என இரு வரிசைகளாக பிரிக்கபட்டு சோதனை செய்த பின்னர் மலைக்கோவிலுக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் , பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய ஒரு மணி நேரம் வரை வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையில் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை தினங்களால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை தினங்களால் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மூஞ்சிக்கள், கல்லறை மேடு ,ஏரிச்சாலை, அப்சர் வேட்டரி, உகார்த்தே நகர், செண்பகனூர் மற்றும் முக்கிய நகர் பகுதிகளில் சாலைகளின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவித்து ஊர்ந்து செல்கின்றன,