Annamalai: 'ஆமாம்... பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரிதான்..' அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!
பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரியாக திகழ்கிறார் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
சிவகங்கையில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை பா.ஜ.க., 9- ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது” காவல்துறையினர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அமைச்சரை குடும்பமே பாதுகாத்து வருகிறது. சாராயத்தின் மூலமாக பல பெண்களின் வாழ்க்கை பறித்தவர் செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டில் சட்டம் என்பது நடுநிலையாக இல்லை. இந்தியாவில் உள்ள மக்களுக்கும் தமிழின் பெருமையை பிரதமர் எடுத்துச் செல்கிறார். தாய் மொழியை வைத்து தமிழக முதல்வர் வியாபாரம் செய்கிறார். 10 ஆண்டுகாலம் திமுக அமைச்சர்கள் ஊழல் மட்டுமே செய்துவந்துள்ளனர். தமிழுக்கு பல பெருமைகளை கொடுத்துள்ளது மத்திய அரசு.
வசூல் செய்யும் தி.மு.க.
மத்திய அரசு இலவசமாக வழங்கும் அனைத்து சலுகைகளுக்கும் திமுக பிரமுகர்கள் பணம் வசூல் செய்கின்றனர். 517 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 57 வாக்குறுதிகளை மட்டுமே தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு சிறுதும் சம்பந்தமில்லாத மருமகன் லண்டனில் இருந்து செந்தில் பாலாஜியை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என குளித்தலை பொதுக்கூட்டத்தில் பேசியவர்தான் மு.க.ஸ்டாலின்.
சாராயக்கடையில் கொள்ளையடித்த அமைச்சருக்கு ஆதரவு கொடுக்கிறது தமிழக அரசு. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டவர்கள் 6 மாதம் திகார் சிறைச்சாலையில் இருந்து வெளியே வரமுடியாது. 2020 புதிய கல்விக் கொள்கையில் முதல் கொள்கையே தமிழ்வழிக்கல்வி என்பதே. தனியார் பள்ளியில் 4 மொழிகளில் மாணவர்கள் பயின்று மேல்நோக்கி செல்கிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் 2 மொழியை மட்டுமே பயின்று கீழ்நோக்கி செல்கிறார்கள். தமிழக விளையாட்டு வீரர்களை தேசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பவில்லை.
சர்வாதிகாரி மோடி:
ப.சிதம்பரம் குடும்பத்தினர்கள் பார்ட் டைமாக சிறைக்கு சென்று வருவார்கள். தி.மு.க., அமைச்சர்களின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மட்டும் ஹிந்தி படிக்கலாம். ஆனால் தமிழக மாணவர்களை ஹிந்தி படிக்க விடாமல் நாடகம் நடத்துகின்றனர். குமுடிப்பூண்டியை தாண்டாதவர்கள் மோடியை விமர்சனம் செய்கின்றனர். மோடியை சர்வாதிகாரி என்று விமர்சனம் செய்கின்றனர்.
ஆம் மோடி சர்வாதிகாரி தான். ஆனால் அவர் ஊழலை ஒழிப்பதில் சர்வாதிகாரியாக இருக்கிறார். பி.ஜே.பி., 2024-ல் 400க்கும் மேற்பட்ட சீட்டுகளை பிடித்து ஆட்சியை பிடிக்கும். சிவகங்கையில் இந்த முறை பி.ஜே.பி., வெற்றிபெறும்.சிவகங்கையில் வெற்றி பெற்ற எம்.பி சிவகங்கை சீமையின் வரலாறுகளை பேசவேண்டும். சிவகங்கையில் 40% வீட்டிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கழிப்பறை, நீர் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களை கொண்டு செல்லவிடுங்கள். அதிகாரிகளுக்கு தடுக்காதீங்க” என்று கோரிக்கைவிடுத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ''அமைச்சருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தான் திராவிட மாடல்"- அண்ணாமலை சாடல்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்