அரசு வேலையில் இணையவிருந்த ரஞ்சிதா... அதற்குள் அகமதாபாத் விமான விபத்தில் பறிபோன உயிர் - பரிதவிக்கும் பிள்ளைகள்
169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில், லண்டனில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த கேரள செவிலியர் உயிரிழந்துள்ளார்.
அகமதாபாத்தில் இருந்து, லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானம் நேற்று (ஜூன் 12) மதியம் விபத்துக்கு உள்ளானது. விமானத்தின் டேக் ஆஃப்ஃபின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் உயிரிழந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து (12.06.2025) நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 241 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி விடுதி அமைந்துள்ள நிலையில்,

இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விபத்தில் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற செவிலியர் உயிரிழந்தார். இவர், லண்டனில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். கேரளாவிலும் சமீபத்தில் அரசு வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஒப்பந்தம் முடிந்ததும் கேரள அரசு வேலையில் ரஞ்சிதா இணையவிருந்துள்ளார். கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரஞ்சிதாவிற்கு, 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.




















