“எங்களையும் கொஞ்சம் பாருங்க...” - வசதியில்லாத பேருந்து... அரசு போக்குவரத்து கழகத்திற்கு வந்த மனு
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனருக்கு நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிதாக தாங்கள் அறிமுகப்படுத்தும் அரசு பேருந்துகளின் படிக்கட்டுகள் கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக இல்லை. பழைய பேருந்துகளில் படிக்கட்டு தடுப்பாக இருந்தது. புதிய பேருந்துகளில் எங்கள் காலை வைத்தால் படிக்கட்டுகளில் உள்ள இடைவெளிகளில் உள்ளே செல்கிறது. பழைய பேருந்துகளில் உள்ளது படிக்கட்டை போன்று அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளில் சாதாரண நபர்கள் அமர்ந்து இருக்கும் போது அவர்களை எழுப்பி அதில் எங்களை அமர செய்ய வேண்டிய கடமை பேருந்து நடத்துநர் அவர்களுக்கு உள்ளது.
அதை ஒரு சில நடத்துநர்கள் செய்வது கிடையாது. அதை செய்வதற்கு பயிற்சி நடத்துநருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சென்னை போன்ற புறநகரங்களில் பேருந்துகளில் தற்போது பேருந்து நிற்கும் இடம் அடுத்து வர இருக்கும் ஊர் ஆகியவை ஒலி பெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. இது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வந்து நிற்கும் போது அங்கு வரும் பேருந்து எந்த ஊருக்கு செல்லும் என்பது அவர்களுக்கு தெரியாது.
ஏனென்றால் அந்த பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் ஊர்களின் பெயர்களை படிக்க முடியாது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அந்த பேருந்தின் வெளியில் அந்த பேருந்து எந்த ஊருக்கு செல்லும் என்பதை ஒலி பெருக்கி மூலம் சப்தமாக அறிவிப்பு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஒரு பேருந்தை வழி மறித்து நிறுத்தினால் பேருந்தை நிறுத்தி அவர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரம் அறிந்து அந்த பேருந்து மாற்றுத்திறனாளி செல்ல வேண்டிய ஊர் வழியாக தான் செல்கிறது என்றால் பேருந்தை நிறுத்தி மாற்றுத்திறனாளியை பத்திரமாக ஏற்றி அவர்களின் ஊரில் இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பேருந்து நடத்துநர்களுக்கு எங்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினாலும் ஒரு சில பேருந்து நடத்துநர்கள் அதை கடைபிடிப்பது கிடையாது. எங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எங்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகள் என்ன அதை பெற நாங்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை தெளிவாக பயிற்சி வழங்கி எல்லா நடத்துநர்களும் நன்கு அறியும் சுற்றறிக்கையையும் அனுப்ப வேண்டும்.
சென்னை போன்ற மாநகராட்சிகளில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தாழ்தள பேருந்துகளை புதிதாக அறிமுகம் செய்து உள்ளது. இந்த பேருந்துகளில் சக்கர நாற்காலி பயனிப்பவர்கள் கூட எளிதில் ஏற முடியும் காரணம் படிகட்டு சாய்வுதளம் போல் மாறும் தன்மை கொண்டது. அப்படி இருந்தும் ஊன்கோல் உதவியுடன் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமம் அடைகிறார்கள். காரணம் ஓட்டுநர் படிக்கட்டை மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு ஏற்றவாறு சாய்வுதளம் போல் இறக்கி தர தயங்குகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் சில பேருந்து ஒட்டுநர்கள் எங்களை கண்டால் பின்னால் வரும் பேருந்தில் ஏறவும் என்று சைகை மூலம் கூறி பேருந்தை நிறுத்தாமல் செல்கிறார்கள். பட்டுக்கோட்டை மகாராஜாசமுத்திரத்தில் தான் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் உள்ளனர். இதற்கான பேருந்து நிறுத்தம் புதுரோடு ஆகும். இங்கு எந்த பேருந்து நின்று செல்வது கிடையாது.
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி புதுரோடு பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















