(Source: ECI/ABP News/ABP Majha)
Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்; மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரள குண்டு வெடிப்பு
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் மூன்று நாட்களாக யகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரார்த்தனை கூட்டமானது நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 2000 பேர் அந்த இடத்தில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென அந்த மையத்தினுள் 3க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 36க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர்” என தெரிவித்தார்.
அதேசமயம் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். இந்த தாக்குதலில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் தொடர் கண்காணிப்பு பணி
இந்த நிலையில் தமிழக மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் வளாகம், பார்சல் சர்வீஸ், ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவிகளுடனும் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும், அவர்களின் உடைமைகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் ரயில் நிலையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை:
ஏற்கனவே அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து மாநில தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உள்துறை அமைச்சர் கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை தொடர்புக் கொண்டு பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்குமாறு என்ஐஏ மற்றும் என்எஸ்ஜிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கேரள குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு டொமினிக் மார்ட்டின் என்பவர் தானே பொறுப்பு என்று கூறி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
இப்படியான நிலையில், கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வனத்துறையினர், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடம் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க - Madurai: தேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை- ட்ரோன்களுக்கு 2 நாட்கள் தடை!