மேலும் அறிய
Advertisement
ஊர் சுற்றலாம் வாங்க: நூற்றாண்டை கடந்து நிற்கும் நெற்களஞ்சியம்...! - கல்விக்கூடமாய் மாறிய கதை...!
’’வில்லிப்பட்டியில் உள்ள நெற்களஞ்சியம் பெரியளவு பயன்பாட்டில் இல்லை என்றாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்கின்றனர் சிவகங்கை தொல்லியல் நடை அமைப்பினர்’’
'வானம் பார்த்த பூமி, கருவைக் காடு நிறைந்த கிராமம்' என சிவகங்கை மாவட்டம் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகமான தெப்பக்குளம், ஏந்தல், ஊரணி என அதிகளவு உள்ள மாவட்டம் சிவகங்கை தான். இப்படி நீரை முக்கியத்துவமாக கருதி சேமித்த, விவசாயம் செய்த ஊரில் பல நெற்களஞ்சியம் இருந்துள்ளன. ஆனால் தற்போதும் பொலிவாக உள்ளது வில்லிப்பட்டி நெற்களஞ்சியம் தான். கட்டிட கலையில் சிறந்து விளங்கிய மாவட்டத்தில் நெற்களஞ்சியம் என்ன லேசாவா இருந்திருக்கும். அரண்மனையை தாண்டும் அளவிற்கு அழகாக தான் கட்டப்படிருக்கும். அப்படியாக பெருமை சொல்லும் அளவிற்கு உயர்ந்தது நிற்பது தான் வில்லிப்பட்டி நெற்களஞ்சியம். சிவகங்கை அருகே வில்லிப்பட்டி கிராமத்தில் அறிவியல் பூர்வமாக கட்டப்பட்டுள்ள பழமையான நெற்களஞ்சியம் தற்போதும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு அதிகளவு தானியங்களை சேமித்த வில்லிப்பட்டி நெற்களஞ்சியம் குறித்து தொல்லியல் ஆர்வலர்கள்..," சிவகங்கை மாவட்டத்தில நிறைய இடங்கள்ள நெற்களஞ்சியம் இருந்துருக்கு. ஆனா வில்லிப்பட்டியில் இருக்க களஞ்சியம் தான் இப்பையும் திடமாவும், பொலிவாகவும் இருக்கு. இங்க உள்ள நெற்களஞ்சியம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேல் தளத்தில் இருந்து தானியத்த கொட்டி கீழ இருந்து குறையக்குறைய எடுத்துக்கிடலாம். தரையோட தளமே 3 அடிக்கு மேல இருக்கும். தளம் 100 நீளம், 36 அடி அகலம் இருக்கும். களஞ்சியத்துல கொட்டுர தானியங்க கெட்டு போகாம இருக்க அந்த காலத்துலையே அறிவியல் முறையில் குளிர்சாதன தத்துவத்த கையாண்டுருக்காங்க.
களஞ்சியத்துக்கு கீழ 2 சுரங்க பாதை மாதிரி அமைச்சுருக்காங்க. இது வெயில், மழைனு எல்லா காலத்திலும் தானியங்கள் கெட்டு போகாம இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. 100 வருடத்தை கடந்த இந்த நெற்களஞ்சியம் நிலச்சுவாந்தாரர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. நீர்த்த சுண்ணாம்பு, பனைவெல்லம், கலச்சிக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி பாரம்பரிய முறையில கட்டிருக்காங்க. ஓட்டு கையல் மூலம் அழகுபடித்தி மேற் கூரைகள் கட்டப்பட்டுள்ளது. 48 தூண்கள் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளது. ஒரே புள்ளியில் தென்படும்படியாக தூண்கள் ஒவ்வொரு பக்கமும் தெரியும். பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்குகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆண்ட செல்வந்தர் யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு தானியங்களை சேமித்து வைத்துள்ளார்.
1964 -ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இப்பகுதி மக்களுக்கு இந்த நெற்களஞ்சியம் தான் அட்சய பாத்திரமாக விளங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சரியாக மழைப் பொழிவு இல்லாததால் தற்போது பெரிய அளவில் இந்த நெற்களஞ்சியத்தை மக்கள் பயன்படுத்தவில்லை. ஆண்டுகள் கடந்தாலும் இந்த நெற்களஞ்சியம் தன் கம்பீரத்தை இழக்காமல் அழகுற காட்சியளிக்கிறது. கிராமத்தை சேர்ந்த முத்துக் கண்ணு நம்மிடம்..," இந்த கிராமத்தில் ஜமீன் பரம்பரையின் வம்சாவழிகள் தான் தற்போது நெற்களஞ்சியத்தை கவனித்து வருகிறோம். அதிக நிலப்பரப்பு கொண்டு விவசாயம் செய்துவந்துள்ளனர். 40 ஏக்கருக்கு மேலே ஆடு, மாடுகள் வளர்ப்புகளை செய்துள்ளனர். கஷ்ட காலங்களில் இப்பகுதி மக்களுக்கு சமைத்து அன்னதானங்களும் கொடுத்துள்ளனர். பாட சாலை இல்லாத காலத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் ஏட்டுக் கல்வி படித்துள்ளனர். மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த நெற்களஞ்சியம் போல் தற்போதைய சூழலில் கட்டுவது சிரமம்.
நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கிய எங்கள் கிராமம் தற்போது நிலத்தடி நீருக்கு சிரமப்படுகிறோம். நெற்களஞ்சியத்தை பார்வையிட பலரும் வந்துசெல்கின்றனர். எனவே இரவு நேரத்திலும் ஜொலிக்க உயர் மின் கோபுரம் எங்கள் கிரமா பஸ்டாப் அருகே அமைக்க வேண்டும்" என்றார். வில்லிப்பட்டியில் உள்ள நெற்களஞ்சியம் பெரியளவு பயன்பாட்டில் இல்லை என்றாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசம் என்கின்றனர் சிவகங்கை தொல்நடை அமைப்பினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பழுப்புக் கீச்சான், உள்ளான், மஞ்சள் வாலாட்டி.. மதுரையில் நடைபெற்ற பறவை காணுதல் நிகழ்ச்சி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion