மணல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலால் 2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வாழும் விவசாயி
எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது, எனக்கே கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியை எப்போதும் கூடவே அழைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் ஒரு பாமரன், ஒரு விவசாயி சுதந்திரமாக செல்ல முடியவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்ற சிறு கிராமம். இங்கு வசிக்கும் விவசாயி பாலகிருஷ்ணன், விவசாயத்துடன் ஆடு மாடுகள் வளர்ப்பு பணிகளையும் செய்து வந்திருக்கிறார். மேலும் கடந்த 2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். அதே ஆண்டு இறுதியில் அகரம் ஊரின் தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் மணல் கொள்ளை நடக்கிறது. அதை ஒட்டியுள்ள சுடுகாட்டிலும் மண்ணை தோண்டி எலும்புகூடுகள் வெளியே சிதற கிடக்கிறது என தனது வார்டு மக்கள் புகாரை பெற்று முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் மணல் கொள்ளையர்களிடமிருந்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தில் கடந்த 14.10.2020 ல் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்த கட்ட விசாரணைகளில் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு மணல் கொள்ளையர்களால் கொலை மிரட்டல் இருப்பதை உறுதி செய்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கிருபாகரன் இருவரும், 19.11.2020 அன்று முதல் மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென காவல்துறைக்கு பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆடு மேய்க்கும் விவசாயி பாலகிருஷ்ணனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்.
இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, மணல் கொள்ளையில் இளைஞர்களே அதிகம் ஈடுபடுகிறார்கள். அதில் அவர்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கிறது. 407 மாடல் வேனில் மணல் கடத்துகின்றனர். ஒரு வேன் இரண்டரை அல்லது மூன்று யூனிட் வரை மணல் பிடிக்கும். அதற்கு 25,000 முதல் 30,000 வரை பணம் கிடைக்கும். இதற்கு வருவாய்த்துறை, காவல்துறை போன்றவற்றில் ஒரு சில அதிகாரிகள் லாப நோக்கத்துடன் உடந்தையாக இருக்கின்றனர். இவர்கள் குறித்து புகார் கூறினால் காவல் நிலையத்தில் நம் பேச்சுக்கும், புகாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. எனவே மணல் கொள்ளை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுத்து இருக்கிறேன். அந்த வழக்குகள் யாவும் நிலுவையில் உள்ளன.
சிபிசிஐடி-யிலும் என் புகாருக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையில் இருக்கும் ஒரு சில அதிகாரிகளால் ஒட்டு மொத்த சமூக ஆர்வலர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கே கொலை செய்து விடுவோம் என மிரட்டல் இருப்பதால் கடந்த இரண்டரை வருடங்களாக நீதிமன்ற உத்தரவின்படி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நிலை நீடிக்க கூடாது, நான் சாதாரண ஒரு விவசாயி. முறப்பநாடு பகுதியில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பது பரவலாக விற்பனை நடப்பதும் உள்ளது. இதனை நானே பலமுறை தகவல் கொடுத்து பிடித்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்களை தண்டனை கொடுக்காமல் வெளியே விட்டு விடுகிறார்கள்.
இந்தப் பகுதி சேர்ந்த காவல்துறையினர் வெளி மாவட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டு மணல் கொள்ளையில் சிக்கும் நபர்களுக்கு ஆதரவாக போன் மூலம் இங்குள்ள காவலர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதனால் மணல் கொள்ளையர்கள் மீது சிறிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது, எனக்கே கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு போலீஸ் அதிகாரியை எப்போதும் கூடவே அழைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் ஒரு பாமரன், ஒரு விவசாயி சுதந்திரமாக செல்ல முடியவில்லை. கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் போலீஸ் இல்லாமலும் என்னால் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையும் மணல் மாபியாக்களால் உள்ளது.
தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிலுள்ள பால் மாடுகளில் இருந்து பால் கறக்க வேண்டும். அதற்கும் அந்த போலீஸை அழைத்துச்செல்கிறேன். அடுத்து அகரத்திலிருந்து பஸ் வசதி கிடையாது. மகனை கல்லூரிக்கு தயார் செய்து பக்கத்து கிராமமான வல்லநாடு பேருந்து நிலையம் வரை சென்று அனுப்ப வேண்டும். அதற்கும் அந்த போலீஸை அழைத்துச்செல்கிறேன். இங்கு அக்கம் பக்கம் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றாலும் போலீசை உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது எனக்கு. இது நீடிக்ககூடாது. சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்