ஜீன்கள் குறைப்பாட்டால் ஏற்பட்ட வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் - அரசு உதவ கோரிக்கை
’’சிறுவனை வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்’’
அரிதினும் அரிதாக பாதிக்கப்படும், ஜீன்கள் குறைபாட்டால் ஏற்படும் தோல் நோயால் அவதிப்பட்டு வரும் 13 வயது சிறுவனை குணப்படுத்த முடியாமல், மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெற்றோருக்கு தமிழக அரசு உதவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் காட்டப்பன்-செல்வி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் காவியபாலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே உடலில் உள்ள தோல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். பொதுவாக மனித உடம்பின் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும். ஆனால் சிறுவன் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே இருப்பதால், பிறந்தது முதலே உடல் முழுவதும் தீக்காயம் பட்டது போல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் அவரது பெற்றோர்கள்.
மேலும் இதற்கு ஜீன்கள் தொடர்பான பிரச்சினையே காரணம் என்று மருத்துவர்கள் கூறுவதாக சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் எவ்வித முன்னேற்றமும், தீர்வும் கிடைக்கவில்லை என்று காவியபாலனின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். தற்போது 8 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் காவியபாலன் படிப்பில் படு சுட்டியாக விளங்குவதாகவும், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
காவிய பாலனை தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. சிறுவனை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் மகன் காவியபலனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, காவியபலனின் தந்தை பிட்டர் வேலையை விட்டு விட்டு, வீட்டிலேயே மளிகைக்கடை வைத்து, கணவன் மனைவி இருவரும் குழந்தையை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
காவியபாலனின் தந்தை காட்டப்பன் 12ஆம் வகுப்பும், தாய் செல்வி பி.ஏ.வும் படித்துள்ளனர். வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் காவியபாலனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவ உதவிக்கு உதவிடவும், சிறுவனை வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மனிதாபிமான அடிப்படையில் கணவன்-மனைவி இருவரில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
’கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் கடவுள் மூத்த தேவி கோவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
திண்டுக்கல் : கி.பி.11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த மூத்த தேவி கோவில்..!