மேலும் அறிய
சிவகங்கையில் 224 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு..தொல்நடைக் குழுவிற்கு பாராட்டு
சிவகங்கையில் 1800 ஆம் ஆண்டு நிலதானக் கல்வெட்டை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
சிவகங்கையில் சிவன் கோயிலுக்கு பின்னால் கல்லெழுத்துடைய கல் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஓவியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து கா. காளிராசா, ”கொல்லங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் கொடுத்த தகவலின் படி சிவன் கோவில் பின்னால் உள்ள பழச்சாறு கடைக்கு அருகில் ஆய்வு மேற்கொண்டோம், அக்கல்லை அங்கு கடை நடத்தி வரும் பரமசிவம் அவர்களின் அனுமதியோடு நகர்த்தி வாசித்துப் பார்த்ததில் அது 1800-வது ஆண்டு கல்வெட்டு, 224 ஆண்டுகள் பழமையானது என்பது தெரிய வந்தது.
சிவகங்கையின் ஐந்தாவது மன்னர்.
1729ல் தொடங்கிய சிவகங்கை மன்னராட்சியின் ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் கொடுத்த நிலதானக் கல்வெட்டு என்பதை கண்டறிந்தோம். இதில் சாலிவாகன சகாப்தம், கலியுக சகாப்தம் குறிக்கப்பெற்றதோடு ரௌத்திரி வருடம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வழங்கப்பட்ட செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
கல்வெட்டு ஸ்ரீராமஜெயம் என்று தொடங்குகிறது. கல்வெட்டில் மூன்று பக்கங்களில் எழுத்துக்கள் உள்ளன. முதல் பக்கத்தில் 35 வரிகளும் மற்றொரு பக்கத்தில் 35 வரிகளும் இதற்கு இடைப்பட்ட குறுகலான பக்கத்தில் 15 வரிகளும் இடம்பெற்றுள்ளன. 35 வரிகள் இடம்பெற்றுள்ள பகுதியும் மற்றொரு பகுதியில் 35 வரிகள் இடம் பெற்றுள்ள பகுதியும் நிலத்தை தானம் கொடுத்த செய்தியை, சிவகங்கை மன்னர் வீரப்பட்டனுக்கு நிதானம் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. குறுகலான 15 வரிகளில் இதை எழுதியவர் விஸ்வாமிதாசன் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
கல்வெட்டுச்செய்தி
மோர்க்குளி எனும் கிராமத்தை நான்கு எல்லை பிரித்து அளவிட்டு சர்வ மானியமாக சடச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு பரம்பரையாக அனுபவித்துக் கொள்ள இந்த நிலதானம் வழங்கப்பட்டுள்ளது. எல்லை பிரிப்பில் முத்தூர் குடியிருப்பு, அரியநாச்சி புரம், மற்றும் பல கண்மாய்கள், கண்மாய் நீர் பிடிப்பகுதிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு யாதொரு காரணத்தினாலோ மோர்க்குளி கிராமத்திற்கு போகாமல் இங்கேயே கிடந்துள்ளது. மேலும் இது தொடர்பான செப்பேடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.
கல்வெட்டுவரிகள்.
முதற்பக்கம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகாமண்டலாதிபன் பாண்டி மண்டல ஸ்தாபனச்சாரியார் சிங்காசனதிபன் ரவி குலதிலகன் ராஜசிகாமணி சிங்கக் கொடியரதிபன் அஷ்டலட்சுமி விலாசம் பொருந்திய ஸ்ரீமது சிவகங்கைச்சீமை ஆதி நகரத்தாராகிய ஸ்ரீ முத்து அரசு நிலையிட்ட முத்து விசைய ரகுநாத முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள் தர்மசாசனம் பண்ணிக் கொடுத்தபடி சாலிவாகன சகாப்தம் 1722 கலியுகாப்தம் 4902-ன் மேல்செல்லா' நின்ற ரௌத்திரி வருஷம் ஆடி மாதம் 26 ஆம் தேதி சுக்கிரபூரம் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதர்ணத்தில் மோர்க்குழி சடைச்சியம்மனை பூசிக்கிற வீர பட்டனுக்கு அரி(தெலுங்குச் சொல்) னு சாசனம் பண்ணிக் கொடுத்தபடி மோர்க்குளி கிராமத்துக்கு நான்கு எல்லைப்படி கீழ்பார்க் கெல்லை உலகாண்டான் அழகிச்சி பள்ளத்துக்கும் அரியநாச்சி கண்மாய் நீர்ப்பிடிப்புக்கும்
இரண்டாம் பக்கம்
மேற்கு தென்பாக்கெல்லை நம்பி செட்டிக் கண்மாய் நீர் பிடிப்புக்கும் கல்லுச்சேரி தர்மத்துக்கும் தென்கரைக்கும் வடக்கு மேல் பார்க் கெல்லை வீராணிக்கண்மாய் கரைக்கும் முத்தூர் குடியிருப்புக்கும் கிழக்கு குத்து உசலாம்பாரைக்கும் கிழக்கு வடபார்கெல்லை சூலக்கான கண்மாய் பிறகரைக்கும் அய்யனார் குளத்து கண்மாய் தென் கோடி புகும் இதற்கு இந்நான்கெல்லைக்குள் உட்பட்ட மோர்க்குழி கிராமமாக சர்வ மானியமாக சாசனம் செய்து கொடுத்ததுனாலே இதைச் சேர்ந்த நஞ்சை புஞ்சை திட்டு திடல் குட்டங் குளம் நத்தம் செய் தலை பாசி படுகை மேல் நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு நிதி நிட்சேப செல தரு பாசன சித்த சாத்தியம் என்று சொல்ல செய்த அட்ட போகமும் சாசனம் செய்து கொடுத்ததனாலே அச்சந்திரார்த்தமாக புத்திர பரம்பரையாக ஆண்டு அனுபவித்துக் கொள்வார்.
மூன்றாம் பக்கம்.
இந்த சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியன் குமாரன் விஸ்வாமி தாசன்.
கல்வெட்டு வடிவமைப்பு.
செப்பு பட்டயங்களில் இடம்பெறும் நஞ்சை, புஞ்சை, திட்டு, திடல், பாசி, படுகை போன்ற சொற்கள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் பல இடங்களில் கிரந்த எழுத்துடைய சமஸ்கிருத சொற்கள் விரவியதாகவும் ஓரிடத்தில் தெலுங்குச் சொல்லும் இடம்பெற்றுள்ளது. குறுகலான பக்கத்தில் இந்தச் சாசனத்தை எழுதியவன் உபய சம்பந்த நம் கோத்திரத்தைச் சார்ந்த திருவேங்கடம் ஆசாரியான் குமரன் விஸ்வாமிதாசன். என்று கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ள வரிகள் தொல்லியல் துறை அலுவலர்களிடம் மேல ஆய்வு செய்யப்பட்டன, இக்கல்வெட்டு விரைவில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion