தேனி : மாவட்டம் முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 14,082 மாணவர்கள்
தேனி மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 14,082 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 433 மாணவர்கள், 7 ஆயிரத்து 450 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 883 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கல்வி மாவட்டம் வாரியாக பெரியகுளத்தில் 3,867 மாணவ, மாணவிகளும், தேனியில் 6,002 மாணவ, மாணவிகளும், உத்தமபாளையத்தில் 5,014 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்தனர்.
மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 14 ஆயிரத்து 82 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அனுமதி பெற்றவர்களில் 801 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 275 பேர், பெரியகுளத்தில் 225 பேர், உத்தமபாளையத்தில் 301 பேர் தேர்வு எழுத வரவில்லை.அதுபோல் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 601 பேர் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் தேர்வு எழுதினர்.
பார்வையற்ற, பார்வைக்குறைபாடுடைய மற்றும் இதர குறைபாடுகளுடன் தேர்வு எழுத இயலாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 55 பேருக்கு, தேர்வு எழுதுவதற்காக உதவியாளராக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆசிரியர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாசித்துக் காட்டினர். அதற்கு மாணவ, மாணவிகள் கூறிய பதிலை ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினர். அந்த வகையில் தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியும், 3 மாணவர்களும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் கண்டுபிடிக்க 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைகளை சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுபோல், தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி : வெகு விமரிசையாக நடைபெறும் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்