காஞ்சிபுரம் பள்ளியில் மாணவர்கள் மோதல்: ஆபத்தான நிலையில் 12ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சி தகவல்
Kanchipuram News: "காஞ்சிபுரம் அடுத்த மானாமதி அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதில், காயம் அடைந்த மாணவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்."

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அருகே பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதில், பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் நிறைந்த இப்பகுதியில் செயல்படும் மிக முக்கிய பள்ளியாக இது பார்க்கப்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சக மாணவர்களுக்கு இடையே மோதல்
இந்நிலையில் மானாமதி அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்த, மாணவர் ஒருவர் மானாமதி அரசு உயர்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு, படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்த பிறகு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது பள்ளியின் அருகே உள்ள மைதானத்தில், சக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
இதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்ட நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவரை சக மாணவர்கள் தாக்கியதில் கடும் காயம் அடைந்துள்ளார். மேலும் மாணவன் கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே விழுந்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மாணவர்
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.





















