அமைச்சர் எ.வ.வேலுவுடன் பாமக எம்.எல்.ஏ அருள் 35 நிமிடம் சந்திப்பு ? சமூக வலைத்தளத்தில் வெடித்த மோதல்..
Pmk MLA Arul: "பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு எதிராக, பாமகவினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

பாமகவின் தற்போது நடைபெற்ற6 வருவது தந்தை - மகன் மோதல் என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாது. பாமகவில் நடைபெற்று வருவதை பார்க்கும்போது, பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய, இருவருக்கிடையே நடைபெறும் அரசியல் ரீதியான மோதல் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியதில் இருந்து பிரச்சனை பெரிதாக மாறத் தொடங்கியது.
அன்புமணியை விமர்சிக்கும் ராமதாஸ்
வன்னியர் சங்க மாநாட்டிற்கு பிறகு இந்த பிரச்சனை குறையும் என கட்சியினர் நம்பியிருந்தனர். வன்னியர் சங்க மாநாட்டு குழு தலைவராக, அன்புமணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிய பிறகும், பிரச்சனை ஒய்ந்தப்பாடு இல்லை. தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் ராமதாஸ், அன்புமணியை எதிர்க்கட்சிகளை காட்டிலும் மிக மோசமான முறையில் விமர்சித்து வருகிறார்.
அன்புமணியோ மாறாக, ராமதாஸ் மீது விமர்சனத்தை முன்வைக்காமல், "அய்யா காட்டிய வழியில் பயணிப்போம்" என கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தந்தையர் தினத்தன்று, கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்ட பயணத்தை தொடங்கினார். அதேபோன்று தந்தையின் பிறந்த நாள் ஜூலை 25ஆம் தேதி, "தமிழக மக்கள் உரிமை மீட்பு" பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அன்புமணி அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் பாமகவினர்
கட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெறும் பிரச்சனை, பாமகவினரின் சமூக வலைதள பக்கங்களிலும் எதிரொளிக்க தொடங்கியுள்ளது. நேற்று அன்புமணி சேலம் சென்று இருந்தார், சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருளுக்கு உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று கௌரவ தலைவர் ஜி.கே.மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு பாமகவினர் சமூக வலைதளத்தில், நேரடியாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர், அருளை விமர்சித்து வருகின்றனர்.
பாமக எம்.எல்.ஏ வை விமர்சிக்கும் பாமகவினர்
பாமக எம்.எல்ஏ அருள் ஒரு காலகட்டத்தில் அன்புமணியின் ஆதரவாளராக பார்க்கப்பட்டார். பாமகவில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்ட பிறகு, ராமதாஸின் ஆதரவாளராகவே செயல்பட்டு வருகிறார். ராமதாஸின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில் அன்புமணி கூட்டத்தில், உடல்நலக் குறைவு காரணமாக எம்.எல்.ஏ கலந்து கொள்ளாததால், அவர் மீது பல்வேறு விமர்சனங்களை பா.ம.கவினர் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் சமகாலத்தில் பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர் : குறிப்பாக அருளிடம் "நீங்கள் அய்யா மற்றும் சின்னையா இருவரும் இரு கண்கள் என்று கூறுகின்றீர்கள். அதை நாங்கள் வரவேற்கின்றோம். நடுநிலையாக இருக்கும் நீங்கள் மருத்துவர் அய்யாவை சென்று பார்த்தது போல, மருத்துவர் சின்னையா அவர்களை ஏன் சென்ற பார்க்கவில்லை? உங்களை தடுப்பது யார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்
அய்யா, சின்னையா இருவரும் இடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி பிரச்சனை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என நீங்கள் ஏன் இருவரையும் நடுநிலையோடு சென்று பார்க்கவில்லை? எனவும் பாமகவினர் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
எ.வ. வேலுடன் ரகசிய சந்திப்பா ?
அன்புமணி ராமதாஸ் பாமகவில் நடைபெறும் பிரச்சனைக்கு, திமுக தான் காரணம் என பகிரங்கமாக பாமக நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள், சந்தித்ததாகவும், 35 நிமிடத்திற்கு மேல் பேசியதாகவும் பாமகவினரே அருளுக்கு எதிராக போர் கொடி துவக்கியுள்ளனர். இந்த தகவல் பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருளின் விளக்கம் என்ன ?
இது தொடர்பாக எம்எல்ஏ அருள் அவருடைய சமூக வலைதள பக்கத்தில், அண்ணன் அன்புமணியிடம் கேளுங்கள் அவர் அரசியலில் கால் பதித்த நாள் முதல் உடனிருப்பவன். தமிழ்நாடு முழுவதும் அண்ணன் அன்புமணி சென்ற குக் கிராமங்களுக்கு சென்றுள்ளேன்.
என்னை பொருத்தவரை மருத்துவர் அய்யாவும் மருத்துவர் சின்னய்யாவும் ஒன்று என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், நேரில் வாருங்கள் ஆதாரத்துடன் நேரலையில் விவாதிப்போம் என பாமகவின் ஊடகப் பேரவையை சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.





















