மதுரை புரோட்டாவை ருசிக்க பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு
மதுரை புரோட்டாவை ருசிக்க வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு மதுரை உணவு விடுதி உரிமையாளர் அழைப்புவிடுத்துள்ளார்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிரபல டெம்பிள் சிட்டி உணவகம், அவ்வப்போது புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்து அசத்துவது வழக்கமான ஒன்று. அவர்களின் உணவைப் போன்றே அதன் உரிமையாளர் குமாரும் வினோதமானவரே.
சமீபத்தில் தனது உணவகத்திற்கான கிளையை கைலாசாவில் திறக்க அனுமதி கேட்டு நித்தியானந்தாவிற்கு அவர் அனுப்பிய கடிதம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டன் பிரதமருக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை வருவதாகவும், மதுரையை பார்வையிட இருப்பதாக தகவல்கள் கசிந்து வரும்நிலையில்
அவ்வாறு மதுரை வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா விழிப்புணர்விற்காக தாங்கள் அறிமுகம் செய்த மாஸ்க் புரோட்டா, கொரோனா போண்டா, கொரோனா தோசை ஆகியவற்றை தங்கள் உணவகம் வந்து ருசிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பிரிட்டன் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மதுரை உணவக உரிமையாளர் அழைப்பை பிரிட்டன் பிரதமர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.