IND vs ENG: பவுலிங் பயங்கரம்! சுருண்டு போன பட்லர் பாய்ஸ்! பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடியுள்ளது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது.
357 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சுப்மன்கில் சதத்தின் உதவியுடன் 356 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 357 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய பில் சால்ட் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக ஆடியது. 6 ஓவர்களில் அவர்கள் 60 ரன்களை எடுத்தது.
மிரட்டிய அர்ஷ்தீப்:
அதிரடி காட்டிய இந்த ஜோடியை அர்ஷ்தீப்சிங் பிரித்தார். அவரது பந்துவீச்சில் பவுண்டரிகளாக விளாசிய டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த சில நிமிடங்களில் பில் சால்ட் 23 ரன்னில் அவுட்டானார். 80 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில், டாம் பாண்டன் - ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. பாண்டன் பவுண்டரியும் சிக்ஸரும் விளாச, கேப்டன் ரோகித் சுழல்பந்துவீச்சாளர்களை அழைத்தார்.
அவரது முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. டாம் பாண்டன் குல்தீப் சுழலில் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் அபாயகரமான பேட்ஸ்மேனான ஜோ ரூட் அக்ஷர் படேல் சுழலில் போல்டானார். 134 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் பட்லர் - ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர்.
அசத்தல் பவுலிங்:
இந்த முறை இந்த ஜோடியை ஹர்ஷித் ராணா பிரித்தார். அவரது முதல் 2 ஓவர்களில் இங்கிலாந்து ரன்களை விளாசிய நிலையில், மீண்டும் பந்து வீச வந்த அவரது பந்தில் கேப்டன் பட்லர் போல்டானார். ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்ட பட்லர் 6 ரன்னில் அவுட்டான பிறகு இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மற்றொரு முனையில் ஹாரி ப்ரூக் 19 ரன்னில் அவுட்டான நிலையில், அடுத்து வந்த லிவிங்ஸ்டனும் 9 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக அட்கின்ஸன் மட்டும் ஆறுதலாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார்.
ஒயிட்வாஷ் செய்த இந்தியா:
இதனால், இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இருப்பினும் கடைசியில் இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால், இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் இந்த போட்டியில் அர்ஷ்தீப்சிங், ராணா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

