ZyCoV-D Vaccine Emergency Approval: 'சைகோவ்-டி' கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய நிபுணர் குழு ஒப்புதல்
தேசிய உயிரி மருந்தாளுமை இயக்கத்தின் கீழ் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே விரைந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை சைடஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான 'சைகோவ்-டி' என்ற கொரோனா தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்காக மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சைகோவ்-டி (ZyCoV-D) எனப்படும் இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து சைடஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டது. இதற்கு தேசிய பயோபார்மா திட்டம் மற்றும் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்ப துறை ஆகியவை உதவி அளித்து வருகின்றன.
முன்னதாக, ஆரோக்கியமான மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளின் 3ம் கட்ட பரிசோதனையை, இந்தியாவில் 26,000 பேரிடம் மேற்கொள்ள இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தது. இதன் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு சக்தி நன்றாக இருப்பதாக இடைக்கால அறிக்கைகள் தெரிவித்துள்ளன.முன்னதாக, முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் ஜைடஸ் கேடிலா நிறுவனம் மேற்கொண்டது. இந்தியாவில், கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக டிஎன்ஏ அடிப்படையில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசி இதுவாகும்.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்காக இதுவரை சீரம் மையம் தயாரிக்கும் ‘‘கோவிஷீல்டு’’ மற்றும் பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனம் தயாரிக்கும் ‘‘கோவாக்சின்”, ரஷ்யாவின் கமாலேயா மையம் தயாரித்த ‘ஸ்புட்நிக்-வி’, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும், மாடர்னா ஆகிய ஐந்து தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி (DCGI)அனுமளித்துள்ளது.
முன்னதாக, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலரும் பி ஐ ஆர் ஏ சி அமைப்பின் தலைவருமான டாக்டர் ரேணு ஸ்வரூப், “தேசிய உயிரி மருந்தாளுமை இயக்கத்தின் கீழ் கோவிட் நோய்க்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே விரைந்து தயாரிப்பது என்பதற்காக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை சைடஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. பல கோடிக்கணக்கான மக்களை அபாயகரமான சூழலில் வைத்துள்ள இந்தப் பயங்கரமான பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சைடஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் தற்போதைய தொற்றுக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற தொற்று வர நேரிட்டால், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும், நாட்டிற்கு உதவும். சமுதாயத்திற்கு மிகவும் தேவையான அளவிடக்கூடிய, உண்மையான மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலான புதிய பொருட்களைக் கண்டறியும் புதுமைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இது அமைகிறது” என்று கூறினார்.
ஊசியில்லா தடுப்பு மருந்து: ஊசியின் மூலம் தடுப்பு மருந்துகளை உடலுக்கு செலுத்தாமல், PharmaJet’s Tropis Needleless Injection என்ற மருத்துவ சாதனம் மூலம் தடுப்பு மருந்து உடலுக்குள் செலுத்தப்படுகிறது. நேரடியாக தோல் பகுதியில் வலியில்லாமல், ஊசியில்லாமல் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.