Vaccine for all affordability | புதிதாக நிர்ணயிக்கப்படும் விலை நடைமுறைகள்.. அனைவருக்கும் கிடைக்குமா கொரோனா தடுப்பூசி?
மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மாநிலங்கள் நேரடியாக வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.95 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.14 லட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்தது. அதன்படி வரும் மே1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மாநிலங்கள் நேரடியாக வாங்கி கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தனது புதிய விலையை அறிவித்தது. அதன்படி மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் ஒரு தடுப்பூசி 400 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு தடுப்பூசியின் விலை 600 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் கடந்த ஓராண்டிற்கு மேலாக மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். அத்துடன் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி தொகையும் இன்னும் வராததால் மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. மேலும் மாநிலங்களில் உற்பத்தி தொழிலும் மிகவும் குறைந்துள்ளதால் மாநிலங்களுக்கு இந்த விலை பெரிய நிதி சுமையாக அமையும். மாநிலங்களால் போதிய நிதி திரட்டி நிறையே தடுப்பூசி வாங்க முடியவில்லை என்றால் மக்களுக்கு அடுத்து உள்ள ஒரே வாய்ப்பு தனியார் மருத்துவமனை தான். தனியார் மருத்துவமனையிலும் 600 ரூபாய்க்கு ஒரு தடுப்பூசி என்றால் இரண்டு தடுப்பூசிக்கு 1200 ரூபாய் ஆகும். ஒரு நபருக்கு 1200 ரூபாய் என்றால் நான்கு பெரியவர்கள் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக 4800 ரூபாய் செலவு ஆகும்.
இத்தகைய செலவு செய்து ஏழை எளிய மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் கடினம் தான். இதனால் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையே தான் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, “கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றால் அதை யார் செலுத்த வேண்டும் அரசா அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபரா? இந்தியாவில் 18 வயது முதல் 44 வரை உள்ளவர்களில் எத்தனை பேர் ஒரு தடுப்பூசிக்கு 400 ரூபாய் செலவுசெய்யும் நிலையில் உள்ளனர்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் மத்திய அரசு தன்வசம் கிடைக்கும் 50 சதவிகித தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. நேற்று முன் தினம் பிரதமர் மோடி தனது உரையில் ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இதை மத்திய அரசு எவ்வாறு சாத்தியமாக்க போகிறது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அனைத்து மாநில மக்களுக்கு இலவசமாக அல்லது மிகவும் குறைந்த விலையில் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.