BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
BJP New Chief: மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவின், புதிய தேசிய தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
BJP New Chief: பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவிக்கு பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையில் ஜெ.பி. நட்டா:
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்று பெரும்பான்மையை கைப்பற்றியது. அதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பொறுப்பேற்றது. அதில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜகவின் பல மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதோடு, பாஜகவின் தேசிய தலைவராக உள்ள ஜெ.பி. நட்டாவும் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் அவர் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து, பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் புதிய தலைவர் யார்?
ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைவதால், அவர் இம்முறை அமைச்சரவையில் இடம்பெறுவார் என ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதேநேரம், அவருக்கு மாற்றாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அல்லது குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் அல்லது பூபேந்திர யாதவ் ஆகியோரில் ஒருவர் பாஜகவின் புதிய தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிடப்பட்ட 3 பேருமே தற்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். பாஜகவை பொறுத்தவரையில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கை கடைபிடிக்கப்படுவதால், அமைச்சரவையில் இருப்பவர்களுக்கு கட்சி பதவி வழங்கப்படமாட்டாது. இதனால், புதிய தலைவர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் பாஜகவினரிடையே அதிகரித்துள்ளது.
பரிசீலனையில் உள்ள பெயர்கள்?
தற்போதைய சூழலில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோரில் ஒருவர், பாஜகவின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- ராஜஸ்தானைச் சேர்ந்த 54 வயதான சுனில் பன்சால் கட்சியின் வேகமான செயல்வீரராக கருதப்படுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் உள்ளார்.
- மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேசிய பொதுச்செயலாளரான வினோத் தாவ்டேவும் (60 வயது) தலைவர் ரேஸில் நீடிக்கிறார். இவர் பொதுத்தேர்தல்களில் மக்களை கவரும் யுக்திகளை அமைப்பதில் வல்லவர் என கருதப்படுகிறார். இந்த ஆண்டின் இறுதியில் மகாராஸ்டிராவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக இருப்பதால் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இமாசலபிரதேச முன்னாள் முதலமைச்சரின் மகனான அனுராக்சிங் தாக்குர், அங்குள்ள ஹமிர்புர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். ஏற்கனவே மத்திய அமைச்சர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார். இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜெ.பி.நட்டாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
- 17-வது மக்களவையை சபாநாயகராக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லாவிற்கும், தேசிய தலைவராக வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம், யாருமே எதிர்பார்த்திடாத ஒருவர் பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆளும் ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சக்தி வாய்ந்த பதவியாகவும் கருதப்படுகிறது.