(Source: ECI/ABP News/ABP Majha)
"என்னால நேத்து நைட் தூங்க முடியல" போராட்டக் களத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் மம்தா உருக்கம்!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை சந்தித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்பும்படி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
தொடரும் மருத்துவர்களின் போராட்டம்:
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாநில சுகாதாரத்துறை அலுவலகம் வெளியே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மருத்துவர்கள் தரப்பும் அரசு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
ஆனால், பேச்சுவார்த்தையில் இன்று வரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி. வங்க மொழியில் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையிலும், தொடர்ந்து பேசிய மம்தா, "ஐந்து நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்.
பிறகு, முழக்கங்களை எழுப்புங்கள். அது, உங்கள் ஜனநாயக உரிமை. நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். எனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கு எதிராக, உங்கள் போராட்டத்திற்கு வணக்கம் செலுத்த நான் இங்கு வந்துள்ளேன்.
நேரில் சந்தித்து உருக்கமாக பேசிய மம்தா:
நானும் மாணவர் இயக்கங்களில் அங்கம் வகித்திருக்கிறேன். என்னுடைய பதவி ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், உங்கள் குரல் பெரியது. இரவு முழுவதும் மழையில் தவித்தீர்கள். அதை நினைத்து நான் மோசமாக உணர்ந்ததால் என்னால் தூங்க முடியவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கிறேன். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு அனுதாபத்துடன் செவிசாய்க்கும் என்று உறுதியளிக்கிறேன்.
கோரிக்கைகளை ஆய்வு செய்வேன். தனியாக ஆட்சி நடத்தவில்லை. தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரிடம் பேசுவேன். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திலோத்தமாவுக்கு நீதி வேண்டும். (பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர்) விசாரணையை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
பணிக்கு திரும்புங்கள். அநீதி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூத்த மற்றும் இளநிலை மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களை அமைப்பேன். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
அவர்கள் ஒன்றும் எனது நண்பர்கள் இல்லை. தயவு செய்து உங்களுக்குள் பேசிவிட்டு வேலைக்கு திரும்புங்கள், நான் உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன். உத்தரப் பிரதேசத்தில் போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் அதை செய்ய மாட்டேன். நீங்கள் நிறைய வேலை செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.