ரயில்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. இந்திய ரயில்வே அறிவிப்பு..
முகக்கவசம் அணியாமல் ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நுழைபவர்களுக்கு குறைந்தது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் ரயில்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் நுழைபவர்களுக்கு குறைந்தது 500 ரூபாய் அபராதம் விதிக்க இந்திய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 2,34,692 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பொதுமுடக்க காலத்தின் போது, கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி இந்திய ரயில்வே அமைச்சகம் படிப்படியாக பயணிகள் சேவையை தொடங்கியது.
மே ஒன்றாம் தேதியில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வந்த தொழிலாளர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மே 12-ஆம் தேதியில் இருந்து சிறப்பு ஏ.சி. ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து பகுதியளவுக்கு ரயில்வே சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. கடந்த மே 11-ஆம் தேதி ரயில்கள் இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில்,"உள்ளே நுழையும் போதும், பயணத்தின் போதும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய ரயில்வே வாரியம் இந்த நெறிமுறையை தற்போது ரயில்வே சட்டம் 2012-இன் கீழ் இணைத்துள்ளது (Indian Railways (Penalties for activities affecting cleanliness at railway premises) Rules 2012). அதன்மூலம், தற்போதைய கோவிட் நோய் தொற்று சூழ்நிலை காரணமாக, சுகாதார விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ரயில் நிலைய அலுவலர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் திரு சுனித் ஷர்மா ," ரயில் சேவைகளை நிறுத்தப் போவதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூடுதலாக 140 ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரயில்வேயிடம் உள்ள நான்காயிரம் ரயில்பெட்டிகளில்; கோவிட் 19 –க்கான சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் அவற்றை அனுப்பி வைப்பதற்கு ரயில்வே வாரியம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
தேவைக்கேற்ப ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு, 1402 சிறப்பு ரயில்களை, இந்திய ரயில்வே துறை இயக்குகிறது. மொத்தம் 5381 புறநகர் ரயில்கள் மற்றும் 830 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.