நிரம்பி வழியும் ஆற்றில் டைவ் அடித்த இளைஞர்... விளையாட்டே விபரீதமான கதை - பதைபதைக்கும் வீடியோ!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அந்த நபர் நிரம்பி வழியும் கிர்னா நதியில் குதிப்பதை காணலாம். அந்த 23 வயதான இளைஞரை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
ஆற்றில் விழுந்த இளைஞரின் பெயர் நயீம் அமீன் என்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு வரை அவரை தேடியதாகவும் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர்.
மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. புனே, நாசிக் மற்றும் 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பால்கர் மாவட்டம் வசாய் நகரில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்தனர். தவிர, கோண்டியா மாவட்டத்தில் நான்கு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தியாவின் மேற்கு கடற்கரை, மத்திய மற்றும் தீபகற்பத்தில் உள்ள ஏழு மாநிலங்களில் மிக அதிக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்தது. 22 ஆற்று தளங்களில் எச்சரிக்கை அளவை விட தண்ணீர் பாய்வதால் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது.
குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழைக்கு பல உயிரிழப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் இம்மாத தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தெற்கு குஜராத்தில் மழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கட்ச், ராஜ்கோட் பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்