லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும்.. பகீர் கிளப்பும் பொது சிவில் சட்டம்!
உத்தரகாண்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் விவரங்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என பொது சிவில் சட்ட நிபுணர் குழு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு.
சர்ச்சையை கிளப்பும் பொது சிவில் சட்டம்: உத்தரகாண்ட் தேர்தலில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரகாண்ட் பாஜக அரசு முனைப்பு காட்டி வந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிமுகம் செய்தார்.
அதில், பல சட்டப்பிரிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. லிவ்-இன் உறவு தொடர்பாக கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். லிவ் இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, பொது சிவில் சட்டம் தொடர்பாக விதிகளை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்த விதிகள்: இந்த நிபுணர் குழு, தாங்கள் தயாரிக்க அறிக்கையை www.ucc.uk.gov.in. என்ற இணையதளத்தில் இன்று பதிவேற்றம் செய்தது. அதில், குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் விவரங்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என நிபுணர் குழு தெரிவித்திருக்கிறது.
பொது சிவில் சட்ட விதிகள் உருவாக்குதல் மற்றும் செயல்படுத்தும் குழு தலைவர் சத்ருகன் சிங், இதுகுறித்து விரிவாக கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அறிக்கையை முன்னதாக வெளியிட முடியவில்லை.
திருமணத்தை பதிவு செய்பவர்கள், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்பவர்கள் தரும் விவரங்கள், மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் விவரங்களை வெளியிட மாட்டோம்" என்றார்.
18 முதல் 21 வயதுடையவர்களின் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பது தனியுரிமை மீதான தாக்குதல் அல்லவா என்ற கேள்விக்கு பதில் அளித்த சத்ருகன் சிங், "அது விவாதத்திற்குரியது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களின் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தொடர்பான விவரங்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும். ஆனால், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களின் வயதை (வாக்களிக்கும் உரிமை இருந்தபோதிலும்) கருத்தில் கொண்டு இருவரின் பாதுகாப்பிற்காக அவரவர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்" என்றார்.
சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் உத்தரகாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.