வந்தே பாரத் ரயிலில் புதிய மெனு... என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?
நாட்டின் அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவீனப்படுத்தப்பட்ட ரயில்கள் இரண்டு புதிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன
நாட்டின் அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவீனப்படுத்தப்பட்ட ரயில்கள் இரண்டு புதிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் தொடங்கி சோலாப்பூர் மற்றும் ஷீரடி சாய் நகர் வழித்தடங்களில் அவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த இரண்டு ரயில்களின் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10, 2023 அன்று மும்பையின் சிஎஸ்எம்டியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டு ரயில்களும் இந்த வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்படுவதால் அது பயணத்தை மிகவும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்களில் பயணம் செய்யும் போது சாப்பிடும் அனுபவத்தை அனைவருமே விரும்புவார்கள். நீங்கள் ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதை விரும்புபவராக இருந்தால், இந்த புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் அப்டேட் செய்யப்பட்ட மெனு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய மெனுவில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே இடம்பெற்றுள்ளன. இதுதவிர மகாராஷ்டிராவிலிருந்து சில பிராந்திய உணவு வகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. காலை உணவு மெனுவில் உள்ள சில உணவுகளில் ஜோவர், பக்ரி, சாபுதானா, நிலக்கடலை கிச்சடி மற்றும், செங்க்தானா சிவ்டா, சோளம் மற்றும் பதாங் ஆகியவை அடங்கும்.
இதுதவிர இரவு உணவுக்கு பட்டாணி புலாவ், பக்ரி, நிலக்கடலை புலாவ், ஆம்தி, தன்யாச்சி உசல், ஜுங்கா, சௌஜி சிக்கன், சிக்கன் தம்டா ரஸ்ஸா மற்றும் சிக்கன் கோலாபுரி ஆகியவை அடங்கும். மாலை நேர சிற்றுண்டிகளில் கோதிம்பீர் வட்டி, தாலி பீட், சபுதானா வடை, ஷேகான் கச்சோரி, மல்டிகிரைன் பதாங் மற்றும் பகர்வாடி ஆகியவை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பொருட்கள் தவிர தினை உணவுகளும் இந்த ரயில்களின் மெனுவில் சிறப்பு அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. டிக்கேட்டுக்கான விலை விவரம் இன்னும் தெரிய வரவில்லை.
முன்னதாக, ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதிதாக திறக்கப்பட இருந்த வந்தே பாரத் ரயிலின் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குல் நடத்தினர். அவர்கள் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரை இயக்கப்படும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
காஞ்சரபாலம் அருகே உள்ள ரயில் பணிமனை அருகே சிலர் விளையாடி கொண்டிருந்ததும் அவர்களே விளையாட்டுத்தனமாக ரயில் மீது கல் எரிந்தது ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
11 ஜனவரி புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தால் ரயிலில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் ரயில்வே போலீஸ் படையுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் பெட்டிகள் விசாகப்பட்டினத்திற்கு புதன்கிழமை அன்று சென்றடைந்தது.
விசாகப்பட்டினத்திற்கு சென்ற அந்த ரயில் பெட்டிகள் காஞ்சரபாலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்குதான், சம்பவம் நடந்ததாக காவல்துறை தகவல் தெரிவிக்கின்றனர். ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதம் அடைந்ததாகவும் மற்றொரு பெட்டியில் விரிசல் ஏற்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
குற்றத்தை செய்த நபர்களை தேடி வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடந்தது. ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது.