பாதிக்கப்பட்ட பெண் தலித்தாக இருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர் தொட்டிருப்பது சந்தேகமே...கேரள நீதிபதி மீண்டும் சர்ச்சை
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி குறித்து நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில், சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள நீதிமன்ற நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்ததால், பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடையை பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்ததால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முகாந்திரம் இல்லை என அவர் தெரிவித்திருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இச்சூழலில், இதற்கு முன்பே அவர் மற்றொரு சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர் சிவிக் சந்திரன்தான். அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சந்திரனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் சாதி குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த வழக்கில் கோழிக்கோடு அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவிக் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். சாதி அமைப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர் போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சாதியை சேர்ந்தவராக இருப்பது அவருக்கு தெரிந்திருந்தால் அவரை சந்திரன் தொட்டிருப்பாரா என்பதை நம்ப கூட முடியவில்லை என நீதிபதி கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவில், "குற்றம் சாட்டப்பட்டவரின் எஸ்எஸ்எல்சி புத்தகத்தின் நகலில் அவர் ஜாதி பெயரைக் குறிப்பிட மறுத்திருப்பது தெரிய வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சீர்திருத்தவாதி. சாதி அமைப்புக்கு எதிராக போராடி, சாதியற்ற சமுதாயத்திற்காக எழுதி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருந்தால் குற்றம்சாட்டப்பட்டவர் அவரின் உடலை தொட்டிருப்பார் என்பது பெருத்த சந்தேகமே" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரன் இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒன்று, ஒரு தலித் எழுத்தாளர் தொடுத்த வழக்கு. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புத்தகக் கண்காட்சியின் போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்ரவரி 2020 இல் நடந்த புத்தகக் கண்காட்சியின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி இளம் எழுத்தாளர் ஒருவர் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இரண்டு வழக்குகளிலும் சந்திரனின் வழக்கறிஞர்கள், குற்றச்சாட்டுகள் அனைத்து பொய்யானவை என விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு, சந்திரன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டது. புகார்தாரரான இளம் எழுத்தாளர், பிப்ரவரி 8, 2020 அன்று நந்தி கடற்கரையில் உள்ள முகாமில் சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார்.
ஜாமீன் கோரிய மனுவுடன், 74 வயதான சந்திரன், புகார்தாரரின் புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை ஒத்திவைத்த கோழிக்கோடு அமர்வு நீதிமன்றம், "பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமான ஆடைகளை பாதிக்கப்பட்ட சிறுமி அணிந்திருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவு இதற்கு பொருந்தாது" என தெரிவித்தது.