Union Budget : டிஜிட்டல் பண பரிவர்த்தனை முதல் ஜிஎஸ்டி வரை...மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள்...
2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் கீழ் இதுவரை மொத்தமாக 11 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் அறிக்கையாக ஆண்டுக்கு ஒரு முறை தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு, வரலாற்றில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த மோடி, பிரதமராக பதவியேற்றார். இவரின் ஆட்சி காலத்தில், நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுகுறித்து கீழே காண்போம்.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பாஜக ஆட்சியின் கீழ் இதுவரை மொத்தமாக 11 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 9 ஆண்டு காலத்தில், அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நிதியமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
அதில், 2014 முதல் 2019 வரையில், பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சி காலத்தில், அருண் ஜெட்லியே ஐந்து முறையும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் பற்றி பிற கட்டுரைகள்: Five Year Plans: மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட வரலாற்றை கைவிட்டு பாஜக அரசு சாதித்தது என்ன? ஓர் அலசல்
ஆனால், 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், உடல் நல குறைபாட்டால் இடைக்கால பட்ஜெட்டை அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், பொறுப்பு நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமன் வசம் சென்றது. இதன் பின்னர், 2019 ஜூலை, 2020 பிப்ரவரி, 2021 பிப்ரவரி, 2022 பிப்ரவரி ஆகிய ஆண்டுகளில் அவரே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது ஐந்தாவது பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய உள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்திய பட்ஜெட் அறிக்கை பாரம்பரிய பிரீஃப்கேஸில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2019ஆம் ஆண்டு முதல், நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக ஆன பிறகு, சிவப்பு நிறத்தினாலான தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட பையில் பட்ஜெட் அறிக்கை கொண்டு வரப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, 2021-22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதல்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ஒரே நாள் இறவில் அறிவிக்கப்பட்டது அடுத்து தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2017ஆம் ஆண்டு, ஒரே நாடு ஒரு வரியை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையில் இது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.
2014ஆம் ஆண்டு, உலகின் 10 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது. மோடியின் ஆட்சியின் கீழ் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது.
அதேபோல, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும் 2029ஆம் ஆண்டுக்குள் ஜப்பானையும் வளர்ச்சி விகித்தில் பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.