Five Year Plans: மத்திய அரசின் ஐந்தாண்டு திட்ட வரலாற்றை கைவிட்டு பாஜக அரசு சாதித்தது என்ன? ஓர் அலசல்
நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்து கைவிடப்பட்ட ஐந்து ஆண்டு திட்டங்களின் வரலாறும், அதனை கைவிட்ட பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த நிதி ஆயோக் குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.
ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு நாட்டின் பல்துறை வளர்ச்சிக்காக, அன்றைய பிரதமர் மோடி எடுத்த முக்கிய முன்னெடுப்பு ”ஐந்தாண்டு திட்டம்”. சோவியத் ஒன்றியம் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக எட்டியதால் , அந்த வகையிலான திட்டமிடலை மேற்கொள்வதன் மூலமே இந்தியாவும் விரைவாகப் பொருளாதார வளர்ச்சியை காண முடியும் என நேரு நம்பியதாக கூறப்படுகிறது.
முதல் ஐந்தாண்டு திட்டம்:
பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தன்னிறைவு என்ற நோக்கத்திலான இந்த பயணத்திற்கான திட்டக்குழு பிரதமரால் தொடங்கப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, வளங்களைப் பெருக்கி, சமச்சீராகப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் சமுதாய நலனை உயர்த்தத் திட்டமிடுதலே இதன் முதன்மை பணி ஆகும். 1951ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கமே விவசாயத் துறையை முன்னேற்றுவதாகும். முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் எதிர்பார்த்ததை விட இந்திய அரசுக்கு கூடுதல் வெற்றியே கிடைத்தது. தனிநபர் வருமானம் 8% உயர்ந்தது. வளர்ச்சி இலக்கான 2.6% தாண்டி, 8.6% வளர்ச்சி கிடைத்தது.
12 ஐந்தாண்டு திட்டங்கள்:
அதைதொடர்ந்து 11 ஐந்தாண்டு திட்டங்கள், தொழில்துறை, சுதந்திரமான பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, தற்சார்பு நிலை, சுரங்கத்தொழில், வறுமை ஒழிப்பு, தொழில்துறை தற்சார்பு, வேலைவாய்ப்பு கல்வி, சமூக நலம் சமுதாய நலன், சமூக நீதியுடன்கூடிய சமமான பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருவாயை இருமடங்கு உயர்த்துவது, விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சி என பல்வேறு நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டது. இறுதியாக 2012-2017 காலகட்டங்களில் செயல்படுத்தப்பட்ட 12வது ஐந்தாண்டு திட்டம், சமுதாய வளர்ச்சி நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் முக்கியமாக விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டங்களில் ஏற்றம், இறக்கம் , வளர்ச்சி மற்றும் பின்னடைவு என மாறி மாறி இருந்தாலும், நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு திட்டக்குழு மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஐந்தாண்டு திட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன.
நிதி ஆயோக்:
இத்தகையை வரலாற்று சிறப்புமிக்க ஐந்தாண்டு திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக நிதி ஆயோக் குழுவை அமைத்தது. இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என அழைக்கபப்டும், இந்த குழவிற்கு திட்டக்குழுவை போன்று நிதி வழங்கவோ அல்லது மாநிலங்கள் சார்பாக முடிவெடுக்கவோ அதிகாரம் இல்லை. இது ஒரு ஆலோசனைக் குழு மட்டுமே.
நிதி ஆயோக்கின் பணிகள்:
வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல். மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல். மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல். நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல். அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமல்படுத்துதல். கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல். சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல். சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழிலதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல் என, ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவது மட்டுமே நிதி ஆயோக்கின் பணிகள் ஆகும்.