தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் கேரளாவில் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! என்ன நடந்தது..?
தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை அடுத்த செங்கனூரில் பம்பையாற்றின் ஒரு பகுதியான பரக்காட்டில் குளித்த இரண்டு சபரிமலை பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது. சென்னை தி.நகரை சேர்ந்த 19 வயதான சந்தோஷ் மற்றும் 21 வயதான அவினாஷ் ஆகியோர் இந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தனர். சபரிமலைக்கு சென்றுவிட்டு செங்கனூர் வந்த குழுவினர் இரவு 7.30 மணிக்கு சென்னைக்கு ரயிலில் வீட்டுக்கு புறப்பட இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
மாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில், தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் அப்பகுதியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இரவு 7 மணியளவில் சடலங்களை கண்டெடுத்தனர். சந்தோஷ் குளித்தபோது நீரில் மூழ்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற அவினாஷும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குருசாமி ரவி தலைமையில் இவர்கள் உள்பட 22 பேர் ஞாயிற்றுக்கிழமை சபரிமலை தரிசனம் செய்ய வந்தனர். இந்த குழுவில் மூன்று பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.