திருப்பதிக்கு செல்லவிருந்த விமானம்.. நடுவானில் தொழில்நுட்ப கோளாறு.. பதற்றத்தில் பயணிகள்
திருப்பதிக்கு செல்லவிருந்த விமானம், டேக் ஆப் ஆன 10 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டேக் ஆப் ஆன 10 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள், தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.
திருப்பதிக்கு செல்லவிருந்த விமானம்:
அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் உலக நாடுகள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டெக் ஆப் செய்த 40 வினாடிகளில் பி. ஜே. மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர மற்ற அனைவரும் (241 பயணிகள்), கல்லூரி விடுதியில் இருந்த 33 பேரும் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானம் இயக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, பல விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறு:
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில, புறப்பட்ட 10 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
80 பயணிகளுடன் எஸ்ஜி 2696 விமானம் காலை 6.10 மணிக்கு ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு புறப்பட்டது. இருப்பினும், சில நிமிடங்களில், அதில் தொழில்நுட்ப சிக்கல் இருப்பதை விமானி கண்டறிந்தார். அவர் உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்குத் திரும்ப அனுமதி கோரினார். இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பதற்றத்தில் பயணிகள்:
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "ஹைதராபாத் - திருப்பதி ஸ்பைஸ்ஜெட் Q400 விமானம் புறப்பட்ட பிறகு, சரக்கு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கதவில் விளக்கு எரிந்தது.
விமானத்தின் உள்ளே அழுத்தம் இயல்பாகவே இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானிகள் ஹைதராபாத் திரும்ப முடிவு செய்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் வழக்கம் போல் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.விமானம் அவசரமாக தரையிறங்கவில்லை. திருப்பதிக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி, ஹைதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பிராங்பேர்ட்டில் இருந்து ஹைதராபாத் சென்ற லுஃப்தான்சா விமானம் ஜெர்மன் விமான நிலையத்திற்குத் திரும்பியது.





















