Tirupathi Tirumala: திருப்பதியில் அங்க பிரதட்சணம் செய்யணுமா..? அப்போ புக் செய்யுங்க.. இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்காக டிக்கெட்களை இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் வெளியிடுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்காக டிக்கெட்களை இன்று காலை 11 மணி முதல் ஆன்லைனில் வெளியிடுவதாக திருமமை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்க பிரதட்சன செய்வதற்கு திருமலை திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த டோக்கன் முறையால் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய இக்கட்டான சூழலை தடுக்கும் வகையில், அங்க பிரதட்சணம் செய்வதற்கு டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாற்றாக பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மார்ச் மாதத்துக்கான அங்க பிரதட்சணம் டோக்கன் ஆன்லைன் ஒதுக்கீட்டையும், இந்த மாதம் 23 முதல் 28ம் தேதிகளுக்கான வெளியிடப்படாத டோக்கன்கள் ஒதுக்கீட்டையும் இன்று (11.02.2023) காலை 11 மணிக்கு திருமலை தேவஸ்தான் ஆன்லைனில் வெளியிடுகிறது. எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
முன்பதிவு:
மார்ச் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கு Tirumala Tirupati Devasthanams(Official Booking Portal) (ap.gov.in) என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி மாதத்தில் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tirumala Tirupati Devasthanams(Official Booking Portal) (ap.gov.in) என்ற தளத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும்,ரூ.300 செலுத்தும், சிறப்பு தரிசனுத்துக்கு பிப்ரவரி மாதத்தில் 22ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிகள் வரை தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tirumala Tirupati Devasthanams(Official Booking Portal) (ap.gov.in) என்ற தளத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.