மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ..சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் ..நடந்தது என்ன?
கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களிலும் கூர்மையான கத்திகளால் குத்தப்பட்ட காயங்கள் இருக்கிறது. அவர்களின் கைகால்களும் வெட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை:
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து மூன்று இளைஞர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லிட்டான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து அதிகாலையில் பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் விவரிக்கையில், "சுற்றிலும் உள்ள கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள்:
கண்டெடுக்கப்பட்ட மூன்று பேரின் உடல்களிலும் கூர்மையான கத்திகளால் குத்தப்பட்ட காயங்கள் இருக்கிறது. அவர்களின் கைகால்களும் வெட்டப்பட்டன" என்றார்.
இனக்கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, மணிப்பூரில் இருந்து தனி நிர்வாகத்தை கோரி குக்கி சோ பழங்குடி மக்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷா தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பழங்குடி மக்களுக்கு என தனி தலைமை செயலாளரும், தனி டிஜிபியை நியமிக்கக் கோரி குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
இனக்கலவரம் காரணமாக, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கும் மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரும்பாலான பழங்குடி எம்.எல்.ஏக்கள், கட்சி வேறுபாடின்றி கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.