Ankita Bhandari murder: இளம்பெண் கொலை: பாஜக தலைவரின் வாரிசு கைது ! கடுமையாக சாடிய ராகுல் காந்தி!
”பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் பெண்களை ஒரு பொருளாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் பார்க்கிறது..”
உத்திராகண்டில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூத்த பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டதை தொடந்து , அவர் நடத்தி வந்த ரிசார்ட்டும் முதல்வரின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , பாஜக ஆட்சியை கடுமையாக சாடியுள்ளார். அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆதாரங்களை அழித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மலப்புரத்தில் உள்ள பாண்டிக்காட்டில் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் பேசியபோது,உத்திராகண்ட் சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.
ராகுல் காந்தி பேசியதாவது :
“நாட்டில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம்.பெண்களை மதிக்கத் தெரியாத ஒரு நாடு ஒருபோதும் எதையும் சாதிக்க முடியாது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கத் தெரியாத நாடு எதையும் சாதிக்க முடியாது. பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கும் நாடு அழிந்துவிடும். பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் பெண்களை ஒரு பொருளாகவும், இரண்டாம் தர குடிமக்களாகவும் பார்க்கிறது.. உதாரணம்..பாஜகவின் தலைவர் ஒருவர் ஹோட்டல் வைத்திருக்கிறார், அவரது மகன் ஒரு பெண்ணை விலைமாதுவாக மாறும்படி வற்புறுத்துகிறார். அந்த பெண் மறுக்கிறார். வாட்ஸப்பில் இந்த குறுஞ்செய்திகள் இருக்கின்றன. அவர்கள் அந்த பெண்ணிற்கு 10,000,ரூ.15,000 வழங்குகிறோம் விலைமாதுவாக மாறு என்கிறார்கள்.நமது சகோதரி அதை மறுத்தபோது, அவள் ஏரியில் இறந்து கிடந்தாள். இந்தியாவில் பாஜக பெண்களை இப்படித்தான் நடத்துகிறது” என கடுமையாக சாடியுள்ளார். உத்தராகண்ட் முதல்வர் ரிசார்ட்டை இடித்ததன் மூலம் ஆதாரங்களை அழித்துவிட்டார் என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி பாஜக அதிகாரத்தைத் தவிர வேறு எதையும் மதிப்பதில்லை என்றார்.
ராகுல் காந்தி குறிப்பிட்ட சம்பவம் என்ன ?
உத்தராகண்ட் மாநிலம் , வனந்தரா பகுதியில் , அம்மாநில மூத்த பாஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த ரிசார்ட்டில் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் , வரவேற்ப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி வேலை முடித்து வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் ரிசார்ட் உரிமையாளரான புல்கித் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், புல்கித் ஆர்யாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். புல்கித் ஆர்யா முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியிருக்கிறார். சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் , அந்த பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியாக தெரிந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மூத்த பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி , கொலை செய்து , அருகில் உள்ள நீர்நிலைகளில் வீசியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்து அந்த ஆடியோவை பதிவு செய்ததாகவும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டுகிறார்.
இதனையடுத்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான ரிசார்ட் உரிமையை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து அந்த ரிசார்ட் முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தலைமையில் இடிக்கப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து ரிசார்ட்டுகளையும் விசாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.