Petrol Diesel Price Today: 663 நாட்களுக்கு பின் குறைக்கப்பட்ட பெட்ரோல் டீசல் விலை.. இன்று முதல் அமல்..!
663 நாட்களுக்கு பின் பெட்ரோல் டீசல் விலை ரூ. 2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா என மக்கள் சுமார் 2 ஆண்டுகளாக காத்திருந்தனர். ஆனால் கடந்த 663 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல் விலை ஓராண்டுக்கு மேலாக ரூ. 102.75 க்கும் டீசல் விலை ரூ.94.34 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை அதிரடி முடிவாக பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை ரூ.92.34-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX
— ANI (@ANI) March 14, 2024
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு அமைந்தது முதலே பெட்ரோல், டீசல் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலை தினசரி விலை நிர்ணய முறையை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இந்த முறைக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்றது. பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100-ஐ கடந்தது இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சபட்சமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மே மாதம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ. 100 குறைக்கப்பட்டது. இது பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் என பல தரப்பினர் கருத்துக்களை முன் வைத்தனர். அதனை தொடர்ந்து தற்போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.