International Day For Girl Child: ’பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும்’.. உலக பெண் குழந்தைகள் தினத்தில் தமிழிசை சௌந்தரராஜன்..!
பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும் பெண் குழந்தைகளில் முன்னேற்றத்தில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளை கொண்டாட வேண்டும் அதில் நம் சமுதாயம் அக்கறை கொள்ள வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலக பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுப்பது, அவர்களது கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவது, சாதனைகளை அங்கீகரிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளை கொண்டாடினாலும் ஏதேனும் ஒரு மூலையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
உலக பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ அக்டோபர் 11 உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கொண்டாடுவோம், பெண் குழந்தைகளையும் கொண்டாடுவோம். பெண் குழந்தைகள கொண்டாடப்பட வேண்டியவர்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றப்பட வேண்டியவர்கள், பெண் குழந்தைகள் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்.
பெண் குழந்தைகளை முன்னேற்றுவதன் மூலம் நம் நாடு முன்னேறும். அதனால் தான் விவேகானந்தர் சொல்லிருப்பது போல் ஒரு நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆண் சிறகும் பெண் சிறகும் சரி சமமாக பணியாற்ற வேண்டும் எனச் சொன்னார். அதேபோல் அம்பேத்கர் ஒரு நாட்டின் குறியீடு பெண்களின் குறியீடு என குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் நம் நாட்டின் பாரத பிரதமர் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பெண் குழந்தைக்ளை முன்னேற்றுவோம் போன்ற திட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பெண்களின் கல்விக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களை வழங்கி வருகிறார். அரசாங்கம் இவ்வளவு திட்டங்கள் வழங்கும் போது சமுதாயமும் பெண் குழந்தைகளை முன்னேற்றுவதில் சரியான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களை முன்னேற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.