காவு வாங்கிய கனமழை! ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்தில் 29 பேர் மரணம் - உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காற்றழுத்தம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் அந்த இரு மாநிலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
29 பேர் உயிரிழப்பு:
இந்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரு மாநிலங்களிலும் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 26 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மாநிலங்களிலும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இதுவரை 29 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களின் நிலை குறித்தும் முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் ரேவந்த் ரெட்டியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், தேவைப்படும் உதவிகளையும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்தார்.
இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு:
தெலங்கானாவில் நிசாமாபாத், அதிலாபாத், ராஜண்ணா சிர்சில்லா, யதாத்ரி புவனகிரி, விகரபாத், சங்கரரெட்டி, காமாரெட்டி மற்றும் மகபுபாநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவில் ஸ்ரீகாகுலம், விஜயநகரம், பார்வதிபுரம், மன்யம், அல்லுரி சீதாராம ராஜூ, காக்கிநாடா மற்றும் நந்த்யாலா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார். இரு மாநிலங்களிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் தென்மாநிலங்களில் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மீட்பு பணி:
24 மணி நேரத்தில் ஜக்கையாபேடாவில் 26 செ.மீட்டர் மழையும், 14 மண்டல்சில் 20 செ.மீட்டர் மழையும் பதிவாகியது. ஆந்திராவின் 14 மாவட்டங்களில் 94க்கும் மேற்பட்ட இடங்களில் 7 செ.மீட்டர் முதல் 12 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் உணவு வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.