(Source: ECI/ABP News/ABP Majha)
National Teacher Award 2021: 44 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்..!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது இன்று குடியரசுத் தலைவரால் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியான இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த தினத்தில் ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு விதிகளை கடைபிடித்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் ஆர்.சி. மீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழச்சியில் 44 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தங்களது ஆசிரிய பணியில் ஆற்றிய சேவைக்காக அவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளார். இவர்கள் அனைவரும் அந்த துறைகளின் நடுவர்களால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் முதலில் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பின்னர், மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். இதையடுத்து, இறுதியாக மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களில் இருந்து குறிப்பிட்ட ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு துறையிலும் அவரவர்களுக்கு அந்த துறையின் உயரிய விருதை அடைவது மிகப்பெரிய கனவாக இருக்கும். அதேபோல, ஒவ்வொரு ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது பெறுவது என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். மேலும், தேசிய நல்லாசிரியர் விருது என்பது அவர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத்தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருது 47 பேருக்கு வழங்கப்பட்டது.