CBI Consent: சிபிஐ-க்கு அனுமதி தராத மாநிலங்கள்.. இதெல்லாம் தான் காரணங்கள்.. நீளும் பட்டியல்..!
வழக்கு விசாரணைக்காக சிபிஐ அமைப்பிற்கு வழங்கி இருந்த முன் அனுமதியை, பல மாநில அரசுகள் திரும்பப் பெற்றதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
வழக்கு விசாரணைக்காக சிபிஐ அமைப்பிற்கு வழங்கி இருந்த முன் அனுமதியை, பல மாநில அரசுகள் திரும்பப் பெற்றதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சிபிஐ-க்கு எதிர்ப்பு:
நாட்டிலேயே உச்சபட்ச விசாரணை அதிகாரம் கொண்ட அமைப்பாக சிபிஐ உள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் சுதந்திரமான அமைப்பாக இது கருதப்படுகிறது. தேசிய அளவில் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மாறிவிட்டதாகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும், அடிபணியவைக்கவும் அவற்றை மத்திய அரசு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அனுமதியை திரும்பப் பெற்ற தமிழக அரசு:
இந்நிலையில் தான், சிபிஐ அமைப்பு தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், ஏற்கனவே பல மாநிலங்கள் சிபிஐ அமைப்பிற்கு வழங்கியிருந்த விசாரணைக்கான முன் அனுமதியை ரத்து செய்துள்ளது.
முன்னிலை வகிக்கும் மேற்குவங்கம்:
சிபிஐ விசாரணைக்கு வழங்கியிருந்த முன் அனுமதியை, நாட்டிலேயே முதல் மாநிலமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்குவங்க மாநில அரசு ரத்து செய்தது. அதைதொடர்ந்து, கேரளா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், மேகாலயா, ஜார்கண்ட், தெலங்கானா மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநில அரசுகளும், சிபிஐ அமைப்பிற்கு வழங்கப்பட்டு இருந்த விசாரணைக்கான முன் அனுமதியை ரத்து செய்துள்ளன. அந்த பட்டியலில் தற்போது 9வது மாநிலமாக தமிழ்நாடு அரசு இணைந்துள்ளது. இதனிடையே, மகராஷ்டிராவிலும் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு சிபிஐ அமைப்பிற்கான முன் அனுமதியை ரத்து செய்து இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சிபிஐ அமைப்பிற்கு மீண்டும் முன் அனுமதி வழங்கப்பட்டது.
பொதுவான காரணம்:
சிபிஐ-க்கான அனுமதியை ரத்து செய்த மாநிலங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், அவை அனைத்தும் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் என்பது தான். சிபிஐ மட்டுமின்றி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற, மத்திய அரசின் கீழ் இயங்கும் விசாரணை அமைப்புகள் அனைத்துமே, எதிர்க்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசியல் தலைவர்களை முடக்கும் நோக்கில் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போன்ற குற்றச்சாட்டுகளை பயன்படுத்தி தான், 9 மாநில அரசுகள் சிபிஐ-க்கு வழங்கி வந்த முன் அனுமதியை ரத்து செய்துள்ளன.